Wednesday, July 18, 2012

பாடல் ௧௯


வடிவுந் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடியந் தமிலா அயில்வேல் அரசே
மிடி என்றொரு பாவி வெளிப்படினே

உடலழகும், பொருட்செல்வமும், நல்ல மனமும், நல்ல பண்பும்
குடும்பமும், கூட்டமும் விட்டு விலகிவிடுகின்றனவே ...
ஆரம்பமும் முடிவும் இல்லாத ஞானவேல் கொண்டு ஆள்பவனே ...
இல்லாமை என்கிற பாவி தலைதூக்கும்பொழுது.

குடிபோகியவா - விட்டுப்போகிறதே என்று வியப்பு கலந்து கூறப்படுகிறது
மிடி - இல்லாமை, வறுமை

மிடி என்றொரு பாவி ...
இந்த 'மிடி என்கிற பாவி' பொருள் இல்லாததால் ஏற்படும் வறுமையை குறிப்பிடவில்லை, அருள் இல்லாததால் ஏற்படும் ஞான வறுமையை குறிக்கிறது. இது தலைதூக்கியபின், பாடலில் சொல்லப்பட்டுள்ளவற்றோடு சேர்ந்து பொருளும் இல்லாது போகும். அனைத்தையும் துறந்து செல்பவருக்கும் இந்த மிடி வரலாம்.
இந்த மிடியிலிருந்து காக்கக்கூடிய, அளவில்லாத கூர்மையான ஞானத்தை வேலாயுதமாக கொண்டு ஆளும் கந்தனிடம், இந்த மிடி குறித்து முறையிடுகிறது இந்தப்பாடல்.



பாடல் ௧௮


உதியா மரியா வுணரா மறவா
விதிமா லறியா விமலன் புதல்வா
அதிகா வநகா வபயா வமரா
பதிகா வலசூ ரபயங் கரனே

பிறக்காத, இறக்காத (பிறப்பு இறப்பு இல்லாத) நினைக்காத, மறக்காத (நினைவு, மறதி இல்லாத)
பிரம்மனும், விஷ்ணுவும் அறிய முடியாத சிவனின் மகனே
மேலானவனே, பாவபுண்ணியமற்றவனே, பயமற்றவனே,
தேவர்களின் இருப்பிடமான அமராவதியினை காப்பவனே, சூரனுக்கு பயத்தை தருபவனே

விதிமால் - பிரம்மன், திருமால்
அதிகன் - மிகுதியானவன் - மேலானவன்
அனகன் - அகம் அற்றவன் - பாவபுண்ணியமற்றவன்
அபயன் - பயம் அற்றவன்

தேவர்களும், அசுரர்களும் மனிதப்பிறவிகள் போன்ற பிறவிகள் என்று கூறப்பட்டாலும், அவர்களை நம் புலன்களால் அறிய முடியாத தேகம் கொண்ட சக்திகள் என்றும், நம் தேகங்களில் இருந்து கொண்டு நமக்கு நன்மை,தீமை செய்யக்கூடியவர்கள் என்றும் கொள்வோமேயானால், தேவர்கள் அசுரர்கள் பற்றிய நமது பார்வை, நன்மை தரும்வகையில், மாறுவதுடன், அவர்கள் பற்றிய கதைகளுக்கு புதிய அர்த்தமும் கிடைக்கும்.
இவ்வித அர்த்தங்களை நல்ல குருமார் தகுதியுள்ள சீடர்களுக்கு வெளிப்படுத்துவர், அப்படி வெளிப்படுத்துவது வார்த்தைகளும், தர்க்கங்களும் இன்றி நடக்கும்.
அமராவதி மட்டுமல்ல, இமயம், பாவங்களைப் போக்கும் கங்கை போன்றவையும் நம் தேகங்களில் இருப்பவையே. கந்தனும் அப்படியே.

பாடல் ௧௭


யாமோ தியகல் வியுமெம் மறிவுந்
தாமே பெறவே லவர்தந் ததனாற்
பூமேல் மயல்போ யறமெய்ப் புணர்வீர்
நாமே னடவீர் நடவீ ரினியே

நாம் படித்த கல்வியையும் நம் அறிவையும்
நாம் பெறுவதற்காக ஞானத்தை வேலாக ஏந்தி நிற்கும் குரு தந்ததால்
உலகின் மேல் உள்ள மயக்கம் அடியோடு தெளிந்து அற, மெய்யுடன் கலப்பவர்களே

இதில் கடைசி வரிக்கு பல விளக்கங்கள் தரலாம், அவரவர்க்கு ஏற்புடையது அவரவர்க்கு சரியான விளக்கம்.


விளக்கம் 1

நாவினால் அவனையும், அவனையடையும் வழியையும் மற்றவருக்கு சொல்லி, பாடி நடந்து காட்டுங்கள். (நன்றிகடனாக அவன் புகழ் பாடல்)

விளக்கம் 2
கந்தனை எப்போதும் நாவில் நடக்கும்படி செய்வீர், அதாவது அவன் பெயரை சதா சொல்வது. (நாம ஜபம் செய்தல்)


விளக்கம் 3
நாக்கிற்கு மேலே இருக்கும் ஏழாம் சக்கரத்தில் சென்று இனி இருங்கள். (ஞான நிலையில் நிலைத்தல்)

பாடல் ௧௬


பேரா சைஎனும் பிணியிற் பிணிபட்
டோரா வினையே னுழலத் தகுமோ 
வீரா முதுசூர் படவே லெறியுஞ் 
சூரா சுர லோ கதுரந் தரனே

பேராசை என்கிற நோயில் கட்டுண்டு துன்பப்பட்டும்
ஆராயாது வினைகள் சேர்க்கும் நான், மீண்டும் மீண்டும் பிறந்து உழல்வது முறையா?
வீரா, பழமையான சூரனாகிய மாயை அழியும்படி ஞான வேல் எறியும்
சூரனே, தேவலோகத்தை பாதுகாக்கும் பொறுப்பேற்றவனே

பிணி - நோய், கட்டு, துன்பம், பின்னல், விருப்பம்
ஓர்தல் - ஆராய்ச்சி, தெளிதல், நினைத்தல், அறிதல், தெரிந்தெடுத்தல்
துரந்தரன்  - பொறுப்பு ஏற்பவன் 

பாடல் ௧௫


முருகன் குமரன் குகனென் றுமொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வெண் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவும்
குருபுங் கவஎண் குணபஞ் சரனே

முருகன், குமரன், குகன் என்று உன் பெயர்களை சொல்லி
உருகும் செயல் நிகழும்படி  செய்து, உணர்வை என்று அருள்வாய்?
போரிடும் தேவர்களும், பூமியில் இருப்பவர்களும் வணங்கும்
பரிசுத்தமான சிறந்த குருவே, எட்டு குணங்களும் குடியிருக்கும் கூடு போன்றவனே

பொரு - போரிடும்
புங்கவர் - பரிசுத்தமானர், சிறந்தவர், தேவர்கள்
பொருபுங்கவர் - தீயவற்றோடு எப்போதும் போரிடும் தேவர்கள்
பரவுதல் - புகழ்தல், துதித்தல்
எண்குணம் - ஆண்டவனிடம் இருக்கும் எட்டுகுணங்கள்
பஞ்சரம் - கூடு

முருகன்...
இளமையை உடையவன், அழகுடையவன், மணமுடையவன், தெய்வத் தன்மையுடையவன், இனியவன் போன்ற பொருள்களையுடைய பெயர்.   நமக்கு விருப்பத்தை ஏற்படுத்தி நம் உள்ளத்தை ஈர்க்கும் பண்புகள் கொண்டவன் என்பதே அடிப்படைக் கருத்து.

குமரன்...
உலக மாயையை போக்குபவன், மாரனை குலைக்கும் பேரழகன்,  துன்பத்தை அழிப்பவன் போன்ற பொருள்கள் கொள்ளும்படியான பெயர்.  நமக்கு நன்மைகளை ஏற்படுத்தி நற்கதியடைய செய்பவன் என்பது அடிப்படை கருத்து.

குகன்...
ஆதாரமானவன், (இதய) குகையில் இருப்பவன் எனும் பொருள்களையுடைய பெயர். இதய குகையை வடமொழியில் தகராகாசம் என்று சொல்வர்.  நம்முடலில் இந்த இடம் தன்னையும், இறைவனையும் உணரக்கூடிய இடம். இதுவே தமிழில் சிற்றம்பலம் என்று குறிப்பிடபடுவதாகவும் கூறுவார். அப்படிப்பட்ட இடத்தில நம்முடன் இணைய காத்திருக்கும் கடவுள் என்பதே அடிப்படைக் கருத்து.

முருகன் குமரன் குகன் ...
முருகனாக பார்த்து விரும்பி, குமரனாக வணங்கி நன்மை பெற்று,  குகனாக உணர்ந்து இணையவேண்டும் என்பதை குறிக்கவே, கந்தனின் இந்த மூன்று பெயர்களை மட்டும் எடுத்து இந்த வரிசையில் கூறப்பட்டதாக அறிகிறேன்.

உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்...
அநுபூதியை அடையும் பயணத்தில் உருகுதல் ஒரு முக்கியமான கட்டம். காப்புப் பாடலே 'நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருக' என்று துவங்குகிறது. அங்கு மட்டுமல்ல, கசிந்துருகுதல், நெக்குருகுதல் என உருகுதல் குறித்து பலமுறை கேட்டறிந்துள்ளோம். உருகாத மனம் பல விடயங்கள் அறிந்து அறிவாளியாகலாம் ஆனால் ஞானம் அடைய முடியாது.
நெகிழ்ந்து உருகக்கூடிய அளவு மனம் உயர்நிலை அடைந்த பின்னரே உணரக்கூடியது ஞான நிலை, அதனாலேயே உருகும் செயல் தந்தபின் உணர்வு அருளப்படுவது என்கிற வரிசையில் வருகிறது.

பாடல் ௧௪


கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்
மெய்வாய் விழிநா சியோடுஞ் செவியாம்
ஐவாய் வழிசெல் லுமவா வினையே

கையில் வாய்த்த ஓளிவிடும் வேல் உடைய முருகனின் திருவடியை (நினைவில்) பெற்று
தெளிந்து, வேண்டியதை அடைந்து, ஈடேறுவாய் மனமே.
உடல், வாய், கண், மூக்கு, காது ஆகிய
ஐந்து பொறிகளின் வழியாக செல்லும் ஆவலை விட்டுவிடு

ஐந்து பொறிகள் மூலம் வருபவற்றை அலட்சியம் செய்ய சொல்லப்படவில்லை, உயிர் உடலில் இருக்க அவை அவசியமானவை. அவற்றின் மூலம் கிடைக்கும் இன்பத்திற்காக அவற்றின் பின் செல்லும் மனதின் ஆவலையே ஒழிக்க வேண்டும்.  இதன் அவசியத்தை அழுத்தமாக சொல்வதற்காக இரண்டு முறை ஒழிவாய், ஒழிவாய் என்று சொல்லப்பட்டுள்ளது. முருகனின் திருவடிகளில் கவனம் வைப்பதே மனம் செய்ய வேண்டியது.

மனதிற்கு அறிவுரை சொல்லும் இரண்டாவது பாடல் இது. இதற்கு முன் ஏழாவது பாடலில் மனதிற்கு அறிவுரை கூறப்பட்டது.

பாடல் ௧௩


முருகன் தனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றெனநின் றதுவே

விளக்கம் 1
முருகன், ஞானத்தை (வேல்) ஆயுதமாக கொண்ட முனிவன், அவனை நம் அஞ்ஞானத்தை போக்கக்கூடிய குரு என்பதை, அவனை வேண்டி அவன் அருள் பெறாது அறியாமல் இருப்பவர்கள், அவனை (கடவுளை) அறியும் தரம் எப்படி இருக்குமென்றால் ...
உருவம் அன்று, அருவம் அன்று, உள்ளது அன்று, இல்லாதது அன்று
இருள் அன்று, ஒளி அன்று எனும்படி இருப்பதே இறைவன் (என்று அறிய முடியாது இருப்பார்)

இந்த விளக்கமே எனக்கு ஏற்புடையது, இதற்கு இன்னொரு விளக்கமும் சொல்வர்.

விளக்கம் 2
முருகன், ஞானத்தை (வேல்) ஆயுதமாக கொண்ட முனிவன், அவனை நம் அஞ்ஞானத்தை போக்கக்கூடிய குரு என்று அறிவது ,  (அவன் இயல்பை அறிவது,)
(அவன் அருள் கொண்டுதான் அறியமுடியும்) அவன் அருள் கொண்டு அறியாதவர்கள் அறிய முடியாதது (அவன்,  அது)
உருவம் அன்று, அருவம் அன்று, உள்ளது அன்று, இல்லாதது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று, எனும்படி (இருமைகளை கடந்து) நிற்பது.

முனி - தவத்தோன், இறைமை

பாடல் ௧௨


செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இருசொல் லறவென் றலுமே
அம்மா பொருளொன் றுமறிந் திலேனே

செம்மையான மானின் மகளான வள்ளியை மற்றவரும் வள்ளியும்  அறியாவண்ணம் களவு வழியில் கவர்ந்தவன்
பெரியவன் முருகன், பிறக்காதவன் இறக்காதவன்
மௌனமாக சொற்களின்றி  சும்மா இரு என்றவுடன்
அம்மா (என்ன ஒரு அதிசயம் ! இதுவரை அறிந்திருந்த எந்த)  ஒரு பொருளையும் இப்போது அறிந்திலேன்

பெம்மான் - பெரியோன், கடவுள்

திருடும் திருடன் ...
கடவுள் சீவன்களை, அவர்கள் அறிவுக்கு எட்டாத வகையில், அருளி தடுத்தாட்கொள்பவன். எனவே அவனை திருடன், கள்வன் என்று ஞானிகள் செல்லமாக அழைப்பர்.

சும்மா இரு சொல்லற ...
சும்மா இரு என்று மட்டும் சொன்னால் அது செயலற்ற தன்மையை குறிக்கும் என்று தான் சொல்லற என்கிற வியாக்கியானத்தோடு சொல்லப்படுகிறது போலுள்ளது. மனதின் மௌனம் பற்றி சொல்லப்படுகிறது.

பொருள் ஒன்றும் அறிந்திலேனே...
அர்த்தம் 1
இதுவரை பொருளாக தெரிந்த அனைத்தும் முருகனாக ஆனது 
அர்த்தம் 2
அனைத்தும் தானாகி புறப்பொருள் எதுவும் இல்லாமல் போனது
அர்த்தம் 3
ஒரு பொருளை பார்க்கும் போது, மனம் அதைப்பற்றி சொற்களால் வர்ணித்து, வெளியில் இருக்கும் பொருளை பார்க்காது மனதில் இருக்கும் பொருளை பார்ப்பதும், அறிவதும் அனைவருக்கும் நடக்கும் செயல். சொல்லும், பற்றும், மனமும் போனது.


பாடல் ௧௧


கூகா வெனவென் கிளைகூ டியழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா 
நாகாசல வேலவ நாலுகவித் 
தியாகா சுரலோக சிகாமணியே

கூ, கா, என்றெல்லாம் ஒலியெழுப்பி என் உறவினர் கூடி ஒப்பாரி வைத்து அழும்படியாக
 இந்த உடலை விட்டு பிரிந்து போகாதவகையில் எனக்கு மெய்ப்பொருளை கூறியவனே,
திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருக்கும் வேலாயுதனே, நால்வகை  கவிகளையும்
பாடும் ஆற்றலை தருபவனே, தேவலோக வாசிகள் தங்கள் தலையால் வணங்கும் சிகாமணியே

நாகாசலம் - திருச்செங்கோடு - ஆதிசேடனாகிய நாகராஜனால் பூசிக்கப்பட்ட இடம்.
நாலுகவி - நால்வகை  கவிகள் - ஆசு கவி, மதுர கவி, சித்திர கவி, வித்தார கவி
சிகாமணி - முடிமணி - தலையில் அணியும் மணி

கிளை கூடியழ போகாவகை
அர்த்தம் 1
உறவினர் கூடி அழும் மரணமில்லாத சாகாநிலை அடைந்ததை குறிக்கிறது
அர்த்தம் 2
ஞானியர்களின் மறைவின்போது, மற்ற சாமானிய மனிதர்களின் மரணத்தைப்போல உறவினர் கூடி ஒப்பாரி வைத்து அழுவதில்லை. ஞானநிலை அடைந்ததை குறிக்கிறது.

பாடல் ௰


கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரிதலாரி யெனுஞ்
சூர்மா மடியத் தொடுவே லவனே

கருமை நிறமுடைய எருமை மீது யமன் வரும்போது தோகையால்
அழகு பெற்ற வாகனமாகிய மயில் மீது ஏறி என் எதிரே வருவாய்
மாலையணிந்த மார்பனே, இந்திரனின் தலத்தை அழித்தவனாகிய
சூரனாகிய மாமரம் மடியும்படி வேலினை ஏவியவனே

காலன் - எமன் - காலம் முடியும் நேரம் வந்து உயிரை எடுப்பவன், மரணத்தை தருபவன்
கலபம் - கலாபம் - தோகை
ஏர் - அழகு
வலாரி - வலன் என்ற அரக்கனை கொன்ற இந்திரன்
வலாரிதலாரி - வலாரியின் தலத்தை அழித்தவன்; இந்திரலோகத்தை அழித்தவன்

மரணபயத்தை நீக்க, பிரணவத்தை வாகனமாகவும், ஞானத்தை ஆயுதமாகவும்  கொண்ட, கந்தனை  வேண்டும் பாடல்.

பாடல் ௯


மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்
தட்டூ டறவேல் சயிலத் தெறியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே

மணம்வீசும் தேன் துளிக்கும்  மலர்களை அணிந்து பிறர் கவனத்தை ஈர்த்து மயக்கும்  பொதுமகளிரின் வலையில்
விழுந்து இங்கும் அங்கும் அலையும் இயல்பை என்று விடுவேன்
தடைகளை அறுத்து செல்லும்படியாக வேலாயுதத்தை மலையான அசுரன் மீது எறியும்
(அசுரர்க்கு ) கொடுமையாக தயவு தாட்சண்யம் காட்டாதவனே, துன்பம் அற்றவனே, பயம் இல்லாதவனே

மட்டு - தேன், மணம்
மையல் - மயக்கம்
பரிசு - இயல்பு
தட்டு - தடை
சயிலம் - மலை
நிட்டூரம் - கொடுமை, தயவு தாட்சண்யம் இல்லாமை
ஆகுலம் - துன்பம், வருத்தம், கலக்கம், மாறுபாடு
நிராகுலம் - ஆகுலம் அற்றது
நிர்ப்பயன் - பயமற்றவன்

மங்கையர் ...
மற்றவரை கவர்ந்து மயக்கி வலையில் விழச்செய்து ஊசல் படும்படியான குணம் கொண்டதாக வர்ணிக்கப்படுவதால்  இங்கு மங்கையர் என்று குறிப்பது பொதுமங்கையரை (விலைமாதர்) என்று கொள்ளப்படுகிறது. இது காதல் மனைவியை குறிப்பது அல்ல. 

பாடல் ௮


அமரும் பதிகே ளகமா மெனுமிப்
பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே

எனது ஊர், எனது உறவினர், நண்பர், எனது வீடு என்று குறுகிய வட்டங்களுக்குள் (மயங்கி இருந்த )
என் மயக்கம் கெடுமாறு (விலகுமாறு)  மெய்ப்பொருளை எனக்கு சொன்னவன்
குமாரன், மலையரசனின் மகளான பார்வதியின் மகன்
போரில் எதிர்த்த அசுரர்களை கொன்றவன்

அமரும் - விரும்பும், தங்கியிருக்கும்
 பதி -  ஊர்
கேள் - உறவு, நட்பு
அகம் - இடம், வீடு, நிலம், உடல்
பிமரம் - பிரமம் என்பது எதுகைக்காக பிமரம் ஆனது
பிரமம் - மயக்கம், கலக்கம்
கிரிராசன் - மலையரசன்
சமரம் - போர்
பொருத - எதிர்த்த
தானவர் - அசுரர்

சமரம் பொரு தானவ நாசகனே ...
பொதுவாக தேவர்கள், அசுரர்கள் வேறு உலகங்களில் வாழ்வதாக நம்பப்பட்டாலும், அனுபவத்தால் அறிந்த ஆன்மிகவாதிகள் தேவரும், அசுரரும் தன்னுள் இருப்பதை ஏற்பர். அசுரர்கள் தோன்றுவதும், தேவர்களோடு போரிடுவதும் தொடர்ந்து நடக்கும் செயலாகும். தேவர்கள் மற்றும் அசுரர்களை விட உயர்ந்த ஒரு சக்தியை கொண்டே அசுரர்களை அழிக்க முடியும். அந்த சக்தியும் நம்முள்ளே இருக்கிறது, வெளியில் வேறு உலகில் இருந்து வரவழைக்க தேவையில்லை.




பாடல் ௭


கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே

அர்த்தம் 1
கெடுகின்ற மனமே நீ கடைத்தேறும் வழி சொல்கிறேன் கேள்
ஒளியாது கேட்டவர்களுக்கு கொடு, கூர்மையான வேல் வைத்திருக்கும் இறைவனின் திருவடிகளை நினை (இவற்றை செய்தால்)
நீண்ட வேதனைகள் துகளாகி மறையும் வண்ணம் சுடுவாய்
உன்னைத் தொடரும் நல்ல, தீய வினைகளை விடுவாய்
(இரண்டு உபதேசங்கள் , இரண்டு பலன்கள்)

அர்த்தம் 2
கெடுகின்ற மனமே நீ கடைத்தேறும் வழி சொல்கிறேன் கேள்
ஒளியாது கேட்டவர்களுக்கு கொடு, கூர்மையான வேல் வைத்திருக்கும் இறைவனின் திருவடிகளை நினை,
நெடுங்காலமாக தொடரும் இந்த பிறந்து இறந்து பிறக்கும் வேதனையை சுடுவாய்.
இந்த வேதனைக்கு காரணமான நல்வினை, தீவினை இரண்டையும் விட்டு பற்றற்று செயல்புரி
(நான்கு உபதேசங்கள்)

கதி - வீடுபேறு, உயர்நிலை
கரவு - மறைத்தல்
வடிவேல் - கூர்மையான வேல், கந்தனின் வேல் ஞானசக்தியை குறிக்கும்

கரவாதிடுதல்...
இடுதல், ஈதல்,  தர்மம் செய்தல் என்று பலவாறு அழைக்கப்படும் இல்லாதவர்க்கு கொடுத்தல் என்பது ஆன்மிகப்பயணத்தில் ஒரு முக்கியமான செயலாக பார்க்கப்படுகிறது. அது தனக்கு சொந்தமான ஒரு பொருளை மற்றவர்களுக்கு உதவும் என்று கொடுப்பது. இடுதலுக்கு தரப்படும் முக்கியத்துவம் ஒருவருக்கு உதவுவது என்பதால் மட்டுமல்ல, மூவாசைகளில் ஒன்றான பொன்னாசைக்கு எதிரான ஒரு செயல் என்பதால் தான்.

இடுதலும் வடிவேல் இறைதாள் நினைதலும்...
இட்டவுடன் நம் மனம் கர்வம் கொள்ளும், அந்த கர்வம் அனுபூதிக்கு எதிரானது, அந்த மனதை பணியவைத்து கர்வத்தை விலகவைக்கவே உடனே வடிவேல் இறைதாள் நினைதல், ஞானத்தை ஆயுதமாக கொண்டிருக்கும் கந்தனின் திருவடி  நினைதல்.

பாடல் ௬


திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்புமதோ
பணியா வெனவள் ளிபதம் பணியுந்
தணியா வதிமோ கதயா பரனே

இறுகிய கல்லுருவம் போன்ற என் மனதில் உனது திருவடியான
அழகு நிரம்பிய தாமரை மலருமா?
எனக்கு வேலை கொடு என்று வள்ளியின் பாதம் பணியும்
என்றும் குறையாத மோகம் போன்ற கருணை உடையவனே

அணி - அழகு
ஆர் - நிறைந்த
அரவிந்தம் - தாமரை

பணியாவென வள்ளிபதம் பணிதல் ...
விளக்கம் 1
வள்ளி என்பது இச்சாசக்தியைக் குறிப்பது. இச்சாசக்தியின் விருப்பங்களை மிகுதியான விருப்பத்துடன் நிறைவேற்றி  வைக்கும் கருணாமூர்த்தி.
விளக்கம் 2
வள்ளி என்பது ஆன்மாவைக்குறிப்பது, கந்தன் பரமாத்மா, ஆன்மாக்களின் தேவைகளை விருப்பத்துடன் பூர்த்தி செய்யும் கருணாமூர்த்தி.

கல்போன்று இறுகிய இடத்தில் தாமரை வளர்ந்து மலர்வதில்லை, இளகிய சேற்றிலேதான் வளர்ந்து மலரும். அதுபோல இறுகிய மனதில் கந்தனின் திருவடி படுவதில்லை.


பாடல் ௫


மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங்குவதே

முதலில் கடைசி இரண்டு வரிகளுக்கான அர்த்தத்தைப் பார்ப்போம்
மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகிய மூவாசைகளால் ஏங்கி, அலைந்து ஓய்ந்துபோகச் செய்யும் இந்த உலகமாயையுள் சிக்கி, செய்யவேண்டியவற்றை செய்யாது தயங்குவதை

முதல் இரண்டு வரிகளுக்கான அர்த்தங்கள் ...

அர்த்தம் 1
மிகப்பெரிய மாயைகள் எனப்படும் சுத்த,அசுத்த மாயைகளையே களையக்கூடிய வல்லமை படைத்த தலைவனாகிய
உன் பெயரை கூறியும் (சகமாயையுள் நின்று தயங்குவதை) நான் ஒழியவில்லையே

அர்த்தம் 2
மிகப்பெரிய மாயைகள் எனப்படும் சுத்த,அசுத்த மாயைகளையே களையக்கூடிய வல்லமை படைத்த தலைவனாகிய நீ
உன் ஆறுமுகங்களாலும்  உபதேசம் செய்தும் (சகமாயையுள் நின்று தயங்குவதை) நான் ஒழியவில்லையே

அர்த்தம் 3
மிகப்பெரிய மாயைகள் எனப்படும் சுத்த,அசுத்த மாயைகளையே களையக்கூடிய வல்லமை படைத்த தலைவனாகிய
உன் ஆறுமுகங்களின்  தத்துவம் அறிந்தும் (சகமாயையுள் நின்று தயங்குவதை) நான் ஒழியவில்லையே

அகம் - வீடு - மண்ணாசை
மாடை - மாடு - செல்வம் - பொன்னாசை
மடந்தையர் - பெண்கள் - பெண்ணாசை

ஆட்சிசெய்வோர் பிறநாட்டின்மீது போர்தொடுப்பது மட்டுமே மண்ணாசையில்லை... ஒரு சொந்தவீட்டிற்காகவும், நிலத்திற்காகவும் சாமானியர்கள் நடத்தும் வாழ்க்கைப்போராட்டமும் மண்ணாசையால் நடப்பதே.

மூவாசைகளால் எவ்வித தகாதசெயல்கள் செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது. இதில் எதனால் மனம் அலைக்கழிக்கப்பட்டாலும் அது அனுபூதிக்கு தடையே.

ஆறுமுகம் என்பதை தத்துவரீதியாக  பலவிதங்களில் பொருள்கொள்ளலாம்.
- சிவன், சக்தி ஆகிய இரண்டின் தன்மைகளும் இணைந்தது (சிவனின் ஐந்து முகங்கள் + சக்தியின் முகம்)
- உடம்பினுள் இருக்கும் ஆறு ஆதாரங்கள்
- உலகை நாம் உணரும் விதம் (ஐம்புலன்கள் + மனம்)
- ஆறு திசையையும் பார்ப்பது (நான்கு திசைகள் + மேல் + கீழ்)
(இன்னமும் இருக்கலாம் ...)

மாயை என்பது குறித்த கருத்துக்கள் பல உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக்கொண்டிருப்போம். அவற்றில் எனக்கு ஏற்புடைய கருத்து இது ...
மாயை என்பது  மாறிக்கொண்டே இருப்பது, ஒரு நிலையில் நில்லாதது தோன்றி மறைவது. மாயை என்பது இயற்கை, உலகவாழ்க்கைக்கு அவசியமானது, நமக்கு எதிரியல்ல.
மாறுகிறது என்பதை உணராமல் நாம் இருந்து கொண்டிருப்பது, கண்கூடாக தெரியும் ஒன்றைப்பாராமல் பழைய நினைவுகளாலேயே அதைப்பார்ப்பது போன்றவை நமக்கு கேடுவிளைவிக்கக்கூடியவை, அதனால் மாயை தவறு என்று சொல்லக்கூடாது. அப்படி சொல்வது முள் குத்தியது என்று சொல்வது போன்றது, முள் வந்து குத்துவதில்லை நாம்தான் கவனமின்றி முள்மீது கால்வைப்போம், முள்ளைக் குறைசொல்வோம்.

பாடல் ௪


வளைபட் டகைம்மா தொடுமக் களெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுசூ ருரமுங் கிரியும்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே

வளையல் அணிந்த கைகளையுடைய மனைவியும், மக்களும்
என்னைக்கட்டும் விலங்காகி நான் அழிவது சரியா?
பல உறவினர்களுடன் எழும் சூரனின் அறிவுத்தெளிவையும், மலையான உருவத்தையும்
துளைத்து ஊடுருவும்படி வேலை தொடுப்பவனே (விடுபவனே).

மாது = பெண், இங்கு மக்களோடு சேர்ந்து சொல்வதால் மனைவி என்று ஆகிறது
தளை  = விலங்கு
கிளை = சுற்றம், உறவினர்
உரம் = அறிவுத்தெளிவு, மார்பு, உறுதி. சூரன் என்பது ஆணவத்தைக் குறிப்பதால், அறிவுத்தெளிவு என்பது இங்கு அதிகப் பொருத்தமானது.

வளை - தளை  பற்றி மேலும் ...
விளக்கம் 1
கைகளில் அணியப்படுவது, நமக்கு அழகு செய்யும் ஆபரணமானால் அது வளை  என்று அழைக்கப்படும், நம் சுதந்திரத்தை தடுக்கும் என்றால் அது விலங்கு என்று அழைக்கப்படும். மனைவி மக்கள் என்றாலே அநுபூதிக்கு தடை என்று முடிவு செய்துவிடக்கூடாது. தடை செய்யும் மனைவி, மக்கள் மட்டுமே விலங்கு.
விளக்கம் 2
மனைவி, மக்கள் நேரடியாக அநுபூதிக்கு தடையாவதில்லை, மனைவி மக்கள் மட்டுமே நம் உலகம், வாழ்க்கை எனும் எண்ணமே தடையாகும். அவ்வித எண்ணமே தளை, விலங்கு.

கிளைபட் டெழுசூ ருரமுங் கிரியும் பற்றி மேலும் ...
இங்கு சூரன் என்பது ஆணவத்தைக் குறிப்பதாகும். ஆணவத்தை அழித்தால் தான் அநுபூதி கிடைக்குமாம். வேல் என்பது ஞானத்தைக் குறிப்பது. ஞானத்தால் ஆணவத்தை நேரடியாக நெருங்க முடியாதாம். ஆணவத்தின் பலகிளைகளில் பட்டு துளைத்து, அதன் உரமான அறிவுத்தெளிவில் பட்டு துளைத்து, அதன் மலை போன்ற உருவில் பட்டு துளைத்த பின்னரே ஆணவத்தை துளைக்குமாம். மற்ற அசுர சம்ஹாரங்களுக்கும் கந்தனின் சூரசம்ஹாரத்திற்கும் ஒரு வேறுபாடு உள்ளது... மற்றவற்றில்
அசுரன் இறப்பான், இங்கு ஆணவமாகிய சூரன் அழிவதில்லை, பிளக்கப்பட்டு அதாவது தன்மை மாறி, சம்ஹாரம் செய்பவனின் வாகனமாகவும், அலங்கார வெற்றிக்கொடியாகவும் மாறுகிறான். 

பாடல் ௩


வானோ புனல்பார் கனல் மாருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனை ஆண்டஇடம்
தானோ பொருளாவது சன்முகனே

அர்த்தம் ௧
ஐம்பூதங்களில் ஒன்றா? ஞானம் உதிக்கும் இடமா? நான்கு வேதங்களா? நானா? மனமா? என்னை ஆட்கொண்ட இடமா?  இந்த ஆறில் எதையும்  மெய்ப்பொருள் என்று கொள்ள முடியவில்லையே.  மெய்ப்பொருள் என்பது எது ஆறுமுகனே?

அர்த்தம் ௨
ஐம்பூதங்களில் ஒன்றா? ஞானம் உதிக்கும் இடமா? நான்கு வேதங்களா? நானா? மனமா?  இந்த ஐந்தில் எதையும்  மெய்ப்பொருள் என்று கொள்ள முடியவில்லையே. என்னை ஆண்ட இடம்தானே மெய்ப்பொருள் சண்முகனே?
'எனை ஆண்ட இடம்' என்று குறிப்பது ஆண்டவனை என்றும், முதல் ஐந்து கேள்விகளில் இல்லாதவண்ணம்  'தானே' என்று அழுத்தம் கொடுத்து கேட்பதால்ஆண்டவன் தான் மெய்ப்பொருள் என்று குறிப்பால் உணர்த்தப்படுகிறது என்று அர்த்தம் கொள்ளப்படுகிறது.

வான் = ஆகாயம்
புனல் = நீர்
பார் = மண்
கனல் = நெருப்பு
மாருதம் = காற்று 

Tuesday, July 17, 2012

பாடல் ௨


உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுர பூபதியே

இது மிக அருமையான பாடல். பலவிதத்திலும் அர்த்தம் கொள்ளக்கூடியது.


முதலில் கடைசி இரண்டு வரிகளின் அர்த்தம் பார்ப்போம்.

(மேலே சொன்னவாறெல்லாம் இருக்கும்)  தேவர்களின் தலைவனே நீ எனக்கு புறப்பற்று எல்லாம் அறுந்து, அகப்பற்றும், நான் எனும் அகங்காரமும் இழந்து நலம்பெற வழிசொல்.



இப்போது முதல் இரண்டு வரிகளின் எனக்கு புரிந்த மூன்று அர்த்தங்களைப் பார்ப்போம்.

௧. பெருமகிழ்ச்சியுடன் துன்பமற்று யோகநிலையில் இனிமையாக பேசி விளையாடுபவன் நீ தானே
உல்லாச - பெருமகிழ்ச்சியுடன் இருப்பது
நிராகுல - துன்பமற்று இருப்பது
யோக - யோகநிலையில் இருப்பது
இத - இதமாக இருப்பது
(வித - பல விதமாக இருப்பது)
சல்லாப - காதல் பேசுதல் (இனிமையாக பேசுதல்)
விநோதன் - விளையாடுபவன்

௨. உல்லாச, நிராகுல, யோக என பலவிதங்களில் சல்லாப விநோதனாக (இனிமையாக பேசி விளையாடுபவனாக) இருப்பவன் நீ தானே.
அதாவது உல்லாச சல்லாப விநோதனாகநிராகுல சல்லாப விநோதனாக, யோக சல்லாப விநோதனாக என பலவிதமாக இருப்பவன் நீ தானே.

௩. என்னுடலில் உள்ள ஆறு ஆதாரங்களாக இருப்பவன் நீ தானே. 
இந்த ஆறு வார்த்தைகளும் ஆறுபடை வீடுகளையும், நம்முடலில் இருக்கு ஆறு ஆதாரங்களை குறிப்பிடுகின்றன 
உல்லாச - என்றைக்கும் ஒரே தன்மையாக இருப்பது; திருப்பரங்குன்றம்; மூலாதாரம் . 

நிராகுல - துன்பமற்று ஞானமயமாக இருப்பது; திருச்செந்தூர்; சுவாதிஷ்டானம்.
யோக - யோகநிலையாகிய இன்பத்தைத் தருவது; திருஆவினன்குடி; மணிபூரகம்.
இத - இதமாக இருப்பது; சுவாமிமலை; அநாகதம்.
சல்லாபம் - குன்றுதோறாடல்; விசுத்தி. 
விநோதம் - வியப்பு, மகிழ்ச்சி; பழமுதிர்சோலை; ஆக்ஞை.

பாடல் ௧


ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியா னைசகோ தரனே

ஆடுகின்ற மயில், வேல், அழகு செய்யும் சேவல் ஆகியவற்றை
பாடுகின்ற பணியையே என் வாழ்க்கை பணியாக அருள்வாய்
நல்லவர்களைத் தேடி கொல்லும் கயமாமுகனை போரிலே
அழிக்கும் ஒப்பற்ற யானைமுகனின் சகோதரனே

ஆடும்பரி = ஆடும் மயில் = ஓங்காரம், பிரணவ சொரூபம் (பரி என்பதற்கு குதிரை என்று ஒரு அர்த்தம் இருந்தாலும், ஆடும்பரி  என்பது ஆடும்மயிலைக் குறிப்பதாகவே அனைத்து உரையாசிரியர்களும் கொள்கிறார்கள்)
வேல் = ஞானம். இதன் உயர்வை உணர்த்த இதற்கு எந்த அடைமொழியும் தராமல் குறிப்பிடப்படுகிறது.
அணி சேவல் = சூரபத்மனை வென்றதை காட்டும் அலங்கார வெற்றிக்கொடி, சேவற்கொடி.
கயமாமுகன் = கஜமுகாசுரன்.

காப்பு





நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமா லைசிறந் திடவே
பஞ்சக் கரவா னைபதம் பணிவாம்


நெஞ்சமாகிய கனத்த, வலிய கல் நெகிழ்ந்து உருகும்படியாக,
தஞ்சம் என்று அடைக்கலம் அடைந்தவர்களுக்கு அருள் புரியும் ஆறுமுகனுக்கு,
சிறப்பான இலக்கணம் சேர்ந்த செம்மையான தமிழ்ச் சொற்கள் கொண்டு புனையும் இந்த மாலை சிறந்திடவே
ஐந்து கைகளைக் கொண்ட யானைமுகனின் பாதங்களை பணிகிறேன்

நெஞ்சம் உருகுதல் என்பது மிக ஆழ்ந்த அனுபவங்களின் பொது மட்டுமே நிகழும். ஆறுமுகனிடம் தஞ்சமடைந்து அவனருள் பெறும்போது நெஞ்சம் உருகுது.
 -