Tuesday, December 13, 2011

சுசியின் அனுபவங்கள் - ஆரம்பம்

சுசி என்பது யார் என்று தெரியாவிட்டால் உங்களுக்கு ரொம்ப நல்லது. சுசியைப் பற்றி நாம் பேச எதுவும் இல்லை. அவன், அவள், அது வேறுபாடுகளை கடப்பதற்காக நாம் சுசியை மரியாதைப் பன்மையில் குறிப்பிடுவோம், மற்றபடி சுசிக்கு மரியாதை தேவையில்லை.

இதில் இடையிடையே நிறுத்தக் குறியீடுகளுக்குள் சொல்லபடுபவை, சுசியின் மனக் குரலாக (மைன்ட் வாய்ஸ் ?)  இருக்கலாம் அல்லது வேறு யாரோ சொன்னதாக இருக்கலாம்.

சுசியின்  அனுபவங்கள் பற்றி மட்டுமே நாம் பேசுவோம், அவை பெரும்பாலும் ஆன்மிக தேடல் சார்ந்தே இருக்கும்.  உங்கள் அனுபவம் எதேனும் இங்கு குறிப்பிடப்படும் அனுபவத்தை ஒத்திருந்தால், சுசியும் நீங்களும் அதே பாதையை, {அதே உயரத்தை} ஒன்றாகவோ அல்லது வெவ்வேறு காலகட்டத்திலோ கடந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.  இதில் அனுபவத்தால் உணராத, புரிந்ததா புரியவில்லையா என்று அறியாத, யாரோ சொன்ன கதைகளும், பாடல்களும் மறுபதிப்பு செய்யப்படமாட்டாது. [இதை செய்து தான் இங்கே பலர் அறிவாளிகளாகவும், ஞானிகளாகவும் உலா வருகின்றனர்]

{அது என்னய்யா பேரு, சுசியின் அனுபவங்கள் ... சின்ன வயசில் அந்த டாக்கீஸ் பக்கத்தில், தெருவோரம் வாங்கி படித்த புத்தகங்களின் பாதிப்போ?}

இதை எழுதுவது யார், படிப்பது யார் என்பது பற்றியெல்லாம் நாம் வீணாக சிந்திக்க வேண்டாம். காலம் வரும் போது நாம் அறியவேண்டியது எப்படியாவது நம்மை வந்தடையுமாம், நேரம் சரியில்லாதபோதும் நம்மை வந்தடைய வேண்டியது எப்படியாவது நம்மை வந்தடையுமாம். நீங்கள் இதையும், இனி வரப்போவதையும் படிப்பீர்களேயானால், அது உங்கள் நேரம்/விதி அப்படி அமைந்ததால் தான். {எவ்வளவோ தாங்கிட்டீங்க இதை தாங்க மாட்டீங்களா}

உங்கள் கருத்துகளுக்கு நான் பதில் சொல்லாதிருந்தால், அதன் காரணம் பெரும்பாலும் நேரமின்மையாகத் தான் இருக்கும். மற்றபடி எதுவுமே இல்லை என்று கண்மூடி இருக்கும் நாத்திக மதவாதங்களுக்கும், ஆண்டவன் எழுதிய எங்கள் புத்தகம் தவிர மற்ற அனைத்தும் தவறே என வழிமூடி இருக்கும் மதவாதங்களுக்கும் பதில் அளிக்க மாட்டேன்.

பல பரிமாணங்கள் கொண்ட வாழ்வில், இந்த இருபரிமாண பதாகைகளால் என்ன பயன் என்று எனக்கும் தெரியவில்லை. (இத்தனை ஆண்டுகளாக கிடைத்த ஆன்மிக அனுபவங்களால் இவற்றைப் படிப்பவர்களில் யாருக்காவது எதாவது பயன் கிடைக்கலாம்), [ஆன்மிக அனுபவங்களை பகிர்வதால் சொல்பவருக்கும் கேட்பவருக்கும் கேடு வரலாம்], {நம்மைப் போல இன்னொருத்தனும் குழம்பி இருக்கான்னு படிக்கிறவங்களுக்கு ஆறுதல் கிடைக்கலாம்}, <நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொண்டால் எல்லாம் நல்லதாக நடக்கலாம்>

"ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
யார் அறிவார் இந்த அகலமும் நீளமும்
பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதின்
வேர் அறியாமை விளம்புகின்றேனே"