சுசியும் மற்ற ஆன்மிகவாதிகள் போல , ஓர் ஆன்மிக குருவை கண்டுபிடித்து விட்டால் அனைத்தும் சுபமாக முடியும் என்ற நம்பிக்கையில், பல ஆண்டுகள் குருவை தேடுவதை முக்கிய தேடலாக கருதி வந்தார். அவ்வப்போது யாரையாவது குரு என்றும் நம்பி இருந்துள்ளார். மற்ற அனைத்து கருத்துகளை போலவே, ஆன்மிக குரு பற்றிய அவர் கருத்துகளும் மாறிக் கொண்டே இருக்கிறது.
குருவை தாயோடு ஒப்பிடலாம் ...
தாயிற் சிறந்த கோவில் இல்லை, தெய்வம் இல்லை என்று ஒருவர் கூறினால், யாரும் அதற்கு எதிர் கருத்து சொல்வதில்லை ... குரு பிரம்மா, குரு விஷ்ணு என்று கூறினாலும் எதிர் கருத்து சொல்வதில்லை
அனைத்து தாய்மார்களும் நல்லவர்கள் என்று ஒருவர் கூறினால், பெரும்பாலானோர், மனதில் மறுப்பிருந்தாலும், எதிர் கருத்து சொல்வதில்லை ... அனைத்து குருமார்களும் நல்லவர்கள் என்று ஒருவர் கூறினாலும் அதே நிலை
தான் தன் மகவை தன் கருவிலேயே அழிப்பது அல்லது வளர்ந்த பின்னரும் மகவின் வாழ்வை, மனதை தன் சுயநலத்திற்காக அழிக்கும் தாய்மார்கள் பலர் இருகின்றனர் ... தன் சீடனின் வாழ்வை, மனதை தன் சுயநலத்திற்காக அழிக்கும் குருமார்கள் பலர் இருக்கின்றனர்.
தன் தீய செயல்கள் அனைத்திற்கும் குடும்பநலமே காரணம் என்று கூறி ஏமாற்றும் தாய்மார்கள் பலருண்டு ... சமுதாய நலமே கரணம் என்று கூறும் குருமார்கள் பலருண்டு.
தாயை புகழ்வதே முக்கிய கடமை என்று நினைக்கும் பாசமிகு மகவுகள் பலர் ... குருவை புகழ்வதே முக்கிய கடமை என்று நினைக்கும் பக்திமிகு சீடர்கள் பலர்.
(மேலே சொன்னவை எல்லாம், குரு என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டு, ஆன்மிக/சமூக சேவை செய்வதாக சொல்லிக்கொள்பவர்களைப் பற்றியே)
ஒருவரின் ஆன்மிக பயணத்திற்கு உதவக் கூடியவர்களை மூன்று விதமாக பிரிக்கலாம் -வழிகாட்டிகள், ஆசிரியர்கள் மற்றும் குரு.
(தமிழில் 'மற்றும்' என்ற வார்த்தையை 'and' என்ற வார்த்தையைப் போல சிலர் பயன்படுத்துகின்றனர், இங்கு அப்படி பயன்படுத்தப் படவில்லை)
வழிகாட்டி என்பவர் நம்முடன் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் நமக்கு வழியை காட்டியபின் தன்வழி செல்வார். அவர் காட்டும் வழி சரியான வழியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சரியான வழியை முடிவு செய்து செல்ல வேண்டியது பயணியின் பொறுப்பு.
ஆசிரியர் என்பவர், பயணத்தைப் பற்றி தன் அறிவால் அறிந்ததை நமக்கு அறிவுறுத்த முயல்பவர். அவர் அறிவுறுத்துவதை அவர் அனுபவித்திருக்க வேண்டிய அவசியமில்லை, பயணியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. படிப்பறிவு, கேள்வியறிவால் அறிந்தவற்றை புரியும்படி எடுத்துச் சொல்ல தெரிந்தால் போதும். சரியானவற்றை மட்டுமே அறிவுறுத்த வேண்டிய கட்டாயம் அவருக்கில்லை. அவர் அறிந்ததை சரியாக அறிந்திருப்பார் என்பதற்கும் எந்த உத்திரவாதமும் இல்லை. இங்கு சரியானவற்றை சரியான முறையில் கற்றுக்கொள்வது கற்பவரின் பொறுப்பு.
குரு என்பவர் மற்ற இரண்டு விதமானவர்களை விட மிகவும் மாறுபட்டவர். தகுதியுடையவனைத் அடையாளம் கண்டு, தேடிச் சென்று அவனை சீடனாக ஏற்பார். சீடன் அறியவேண்டியவற்றை சரியான நேரத்தில், சரியான முறையில் அறிவுறுத்துவார். சீடனை வழிநடத்தும் பொறுப்பை ஏற்பார். தான் சென்றடைய முடியாவிட்டாலும், தன்னையிழந்தேனும், சீடன் சென்றடைய வழி செய்வார்.
[சுசி இதுவரை வழிகாட்டிகளையும், ஆசிரியர்களையும் தான் சந்தித்துள்ளார். குருவைப் பற்றி சொல்வதெல்லாம் படிப்பு, கேள்வியால் அறிந்தவை] {இதுவரை யாரும் இவரை சீடராக ஏற்காததால் குருவின்றி இருக்கிறார்}
"ஆசிரமம் அமைத்து, பாடத் திட்டம் வகுத்து, கட்டணம் வசூலித்து ஆன்மிகம் கற்றுத் தரும் ஆசிரமத் தலைவர்கள், ஆன்மிக குரு ஆவதில்லை "
நூறு முதல் பல ஆயிரம் ஆட்களிடம் கட்டணம் வசூலித்து, மேடை மீது அமர்ந்து, ஒளி , ஒலி பெருக்கிகள் மூலம் தங்களிடம் பேசும் ஒருவரை குருவாக சிலர் கருதுகிறார்கள், தங்களை சீடர்களாக அர்ப்பணமும் செய்கிறார்கள். இப்படிப் பட்டவர்களால் சபலம் ஏற்பட்டு, இவர்களை பயன்படுத்திக் கொள்கின்றார்கள் ஆசிரமத் தலைவர்கள். அந்தத் தலைவர் தன் பயணத்திற்கு எவ்விதம் பொறுப்பு ஏற்கிறார் என்பதைப் பற்றி இவர்கள் சிந்திப்பதில்லை. இங்கு ஓர் ஆசிரிய மாணவர் உறவுக்கு மேல் எதுவுமில்லை என்பதை இவர்கள் உணர்வதில்லை.
இந்நிலைக்கு முக்கிய காரணம்,ஓர் ஆன்மிக குருவை கண்டுபிடித்து விட்டால் அனைத்தும் சுபமாக முடியும் என்ற நம்பிக்கையே. பருவ வயதில் துணை இன்றி அலையும் வாலிபன், கண்ணைக் கவரும் பெண்ணை காதலியாக மனதில் ஏற்றுக் கொள்வது போன்றே, குரு தேடி அலையும் இவர்கள், கிடைத்தவரை குருவாக ஏற்கிறார்கள். இவர்கள் மறக்கும் முக்கியமான விசயம், இவர்களின் குருவிற்கு, அவர் முன்னே அமர்ந்திருக்கும் நூறு பேரில் நான்கு பேரின் பெயர் கூட தெரியாது என்பதே ...
{எனக்கு அவரைத் தெரியும்... ஆனா அவருக்கு என்னைத் தெரியாது}
உங்கள் எஜமானியை நீங்கள் அன்னை, அம்மா, தாயே என்றெல்லாம் அழைக்கலாம் ஆனால் அவரை உண்மையில் உங்கள் தாய் என்று நம்பினால் உங்களிடம் ஏதோ குறை உள்ளது என்று தானே ஆகும்?
[சுசியும் இப்படி சிலரை குரு என்று நம்பியவர் தான், ஏதோ அவர் நல்லநேரம், கட்டணம் தவிர வேறு எதையும் இழக்கவில்லை]
இதற்கு முந்தைய குறிப்பில் குறிப்பிட்டபடி இவர்கள் சொல்லித்தரும் பல பயிற்சிகள் நல்ல பயிற்சிகளே ...
{பின்னே, ஆயிரக்கணக்கான வருடங்களாக நம் நாட்டு ஞானிகளும், யோகிகளும் ஆராய்ந்து கண்டுபிடித்தவை தானே இவர்கள் சொல்லித் தருவது}
"இந்த ஆசிரியர்கள் சொல்லித் தரும் பயிற்சிகளை புரிந்து தேர்வு செய்து தொடர்ந்து செய்து வந்தால், குரு தன்னைத் தேடி வரும் தகுதி வரும் என்ற நம்பிக்கையோடும், அனைத்தையும் அருளும் இறைசக்தி தக்க சமயத்தில் நல்ல குருவையும் அருளும் என்ற நம்பிக்கையோடும், குருவை தேடுவதை சுசி நிறுத்தி விட்டார் "
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே