Monday, January 2, 2012

ஆன்மிக நாட்டம்


சுசிக்கு ஆன்மிக நாட்டம் ஏற்பட்டபோது அவருக்கு வயது பதினான்கு முடிந்திருந்தது. அன்று முதல் இன்று வரை அந்த நாட்டம் விடாது நிலைத்திருக்கிறது. அவர் நண்பர்களில் பலருக்கு அந்த நாட்டம் வருவதையும், சில நாட்களில் அது மறைவதையும் அவர் பார்த்து வருகிறார்.

அந்த நாட்டம் வந்தபோது, அவர் வயதில் இருக்கும் பெரும்பான்மையான மற்றவர்களைப் போல அவரும் பரீட்சையாலும், வீட்டுப் பாடங்களாலும் பிரச்னை வரும்போது மட்டும் மனமுருகி இறைவனை வேண்டி வந்தவர், {இவற்றால் அடிக்கடி இறைவனை வேண்டியவர்}.  பெரியவர்களின் வற்புறுத்தலால் கோவிலில் அமைதியாக இருப்பது போலவும், வணங்குவது போலவும் பாவனை செய்து வந்தவர், {எதிர் வரிசையில் நிற்பவர்களிடம் நற்பெயர் கிடைக்கும் என்று நம்பியும் பலமுறை பாவனை செய்துள்ளார்}

ஒன்பதாவது முடித்து, கோடை விடுமுறையில் அவர் சித்தப்பா வீட்டிற்கு சென்றிருந்த போது அவர் படித்த புத்தகம் ஒன்று அவரிடம் பெரிய மாற்றத்தை  ஏற்படுத்தியது. [அந்த நாட்களில் பத்தாவது பாடங்களை பத்தாவது படிக்கும் போது மட்டும் தான் படித்தார்கள், ஒன்பதாவதிலும், விடுமுறைகளிலும் படித்ததில்லை]. அந்த புத்தகம், அந்த வயதிற்குரிய வழக்கமான நாட்டங்கள் தவிர ஒரு புதிய நாட்டத்தை ஏற்படுத்தியது. அவரைப் பொருத்தவரை அப்போது அது ஆன்மிகம் இல்லை, மனோசக்தி (அவர் படித்த புத்தகத்தின் பெயரும் அதே).

அப்போதிருந்தே அவருக்கு கடினமான தத்துவங்களை படித்து அறிவதைவிட, எளியதானதாயினும் அனுபவத்தால் அறிவதிலேயே அதிக ஆர்வம்.  அந்த புத்தகத்தில் படித்து அவர் செய்த முதல் பயிற்சி - மெஸ்மரிசம். [பலரும் மெஸ்மரிசம் (Mesmerism) என்றவுடன் ஹிப்னடிசம் (Hypnotism)  பற்றி தான் நினைப்பார்கள். இரண்டும் வேறுவேறு.]. அதில் அவருக்குக் கிடைத்த சிறு வெற்றி {அப்போது அது பெரிய வெற்றி}, அவருக்கு ஒரு ஞானத்தை கொடுத்தது.

<நம் புலன்களுக்கு புலப்படாத, மனதிற்கு புரியாத, அறிவிற்கு எட்டாத, சக்திகள் இருக்கின்றன.  சரியான முறையில் அணுகினால் அவை நம்முடன் இணைந்து செயல்படும்.>

அன்று முதல் இன்று வரை அவர் நாட்டம் மறையாமல் இருக்க காரணம் அவர் பரீட்சித்து, அனுபவித்துக் காணும் முடிவுகளும், பலன்களுமே ஆகும். அன்று முதல் இன்று வரை அவர் பல தனிநபர்கள், ஆசிரமங்கள் மற்றும் நிறுவனங்கள் {ஆசிரமங்களும் நிறுவனங்களே, என்ன வித்தியாசம்?} சொல்லித் தரும்  பல்வேறு ஆன்மிக சாதனை முறைகளையும், பயிற்சிகளையும், விளக்கங்களையும் வலிய சென்று பயின்றும், முயன்றும், பரீட்சித்தும் வருகிறார். அவற்றில் பல நல்லவையே. {பின்னே, ஆயிரக்கணக்கான வருடங்களாக நம் நாட்டு ஞானிகளும், யோகிகளும் ஆராய்ந்து கண்டுபிடித்தவை தானே இவர்கள் சொல்லித் தருவதும் ... எப்படி வேலை செய்யாமல் போகும்?}

அவர் நண்பர்களில் சிலருக்கு  நாட்டம் மறைந்ததற்கான காரணங்கள்...
- உள்ளே நடக்கும் மாற்றங்களை கவனிக்க தெரியாமல், வெளியே மட்டும் பார்த்தனர்
- மற்றவர்களிடம் பெரியவன் என்று காட்டிக்கொள்வதற்காக மட்டுமே பெரிய புத்தகங்களையும், புரியாத தத்துவங்களையும் படித்தும், சொல்லியும் காலம் கழித்தபின் சுயமுன்னேற்றம் ஒன்றும் காணாது, இதில் ஒன்றும் இல்லை என்றனர்
- இயற்கை விதிகளை மீறி எதாவது நடக்கும் (மந்திரத்தால் மாங்காய் வரும்) என்று நம்பி வந்து ஏமாந்தனர்
- கெட்டது எதுவும் செய்யாதிருப்பதே போதும் என்று எந்த நல்ல பயிற்சியோ, முயற்சியோ செய்யாது இருந்தனர்
- குரு என்று எதாவது ஒரு எமாற்றுக்காரனை நம்பி, அவனிடம் பணம், மற்றவற்றை இழந்து, அவனை வணங்குவதை தவிர வேறொன்றும் செய்யாது கைவிடப்பட்டனர்
- நண்பருக்காக, கூட சென்று வேடிக்கை பார்த்து விட்டு வந்து, சிற்றறிவால் ஆராய்ந்து, இதில் ஒன்றுமில்லை என்று முடிவு செய்தனர்
- வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு, முழுதும் புரிந்தது போல பேசும் நண்பர் {சுவரொட்டி பார்த்து படக்கதை சொல்பவர்} சொன்னதைக் கேட்டு இந்த முயற்சி செய்வது வீண் என்று கைவிட்டனர்

நீங்கள் ஆன்மிக நாட்டம் உள்ளவர் என்பதால் தான், இந்த வரி வரை படிக்கிறீர்கள் என்று நினைக்கிறன்... உங்களுக்கு பயன் தரக்கூடிய, நான் கற்ற பாடம் ...

<பெரியவர்கள் சொன்னதை படிப்பதோடு நிறுத்தி விடாதீர்கள், செய்து பாருங்கள். செய்து பார்க்க முடியாத ஒன்று, உங்களுக்கு பயனற்ற ஒன்றாகவே பெரும்பாலும் இருக்கும் >

[அவருக்கு மட்டுமே சாத்தியம், உங்களுக்கு அல்ல ...  அவரை வேடிக்கை மட்டும் பாருங்கள் ... அவர் மனம் மகிழும்படி நடந்து கொள்ளுங்கள், அது போதும், அவர் பார்த்துக் கொள்வார் ... எனும்படியானவை உங்களை ஏமாற்ற செய்யப்படும் வித்தை என்று அறிக. இப்போது இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் நீங்கள் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும், அல்லது நீங்கள் செய்ய முடியாததற்கு எதேனும் சரியான காரணம் சொல்லப் பட வேண்டும்.]

(நம்பிக்கையான, நலம் விரும்பும் பெரியோர், செய்யாதே என்று சொல்லும் செயல்களை செய்யாதீர்கள். சுசி அதை மீறி சிலவற்றை செய்து, துன்பங்களை அனுபவித்து மீண்டு வந்ததும் உண்டு. நல்லதை மட்டும் செய்யுங்கள், நல்லதில்லையோ என்ற சிறு சந்தேகம் இருந்தால் கூட  அதை செய்யாதீர்கள்)

<வெறும் நம்பிக்கை மட்டுமே சார்ந்தது ஆன்மிகம் ஆகாது, அதை பின்பற்றினால் காலப்போக்கில் உங்கள் நாட்டம் குறையும், மறையும்>

"ஞானநூல்கள் தேடியே நவின்றஞான யோகிகாள்
ஞானமான சோதியை நாடிஉள் அறிகிலீர்
ஞானமாகி நின்றதோர் நாதனை அறிந்தபின்
ஞானமல்ல தில்லைவேறு நாம் உரைத்த துண்மையே"

Sunday, January 1, 2012

ஆன்மிகம்

சுசி கடந்த முப்பது ஆண்டுகளாக தன்னை ஆன்மிகவாதி என்று கூறிக் கொள்கிறார். ஆன்மிகம் என்று கூறிக்கொண்டு - புத்தகங்கள் வாங்குவது, பயிற்சிக் கட்டணம் செலுத்துவது என்று பணம் செலவு செய்கிறார்; பயிற்சி செய்வது, படிப்பது என்று தனிமையில் நேரம் செலவு செய்கிறார்.

இந்த ஆன்மிகம் என்பது என்ன என்று ஒரு {இரண்டு மதிப்பெண்} கேள்வி கேட்டால் ... நீண்ட நேரம் மௌனமாகிறார்...

(சிந்திக்கிறார்)
[கேட்பவரின் முதிர்ச்சி, புரிதலுக்கு ஏற்ற பதில் தேடுகிறார்]
{இந்தக் கேள்விக்கான சரியான பதில்கூட முப்பது ஆண்டுகளாக கிடைக்கவில்லை }
[இது என்ன இரண்டு மதிப்பெண் கேள்வியா? 15 மதிப்பெண் இல்லை, நூறு மதிப்பெண் கூட போதாது, பெரிய புத்தகமே எழுதலாம்]
{ஏற்கனவே நிறைய புத்தகங்கள் வந்தாச்சு ... 15 மதிப்பெண் பதிலே கொஞ்சம் கஷ்டம் தான், தூக்கம் வரும் ... }

"எவ்வாறு காண்பான் அறிவு தனக்கு எல்லை
அவ்வாறு அருள் செய்வன் ஆதி அரன்தானும்"

ஆன்மிகம் என்பது ...

சாதிக்க  முடியாதவர்கள் தேடிக் கொள்ளும் சுலபமான அடையாளம் என்றார்,
யாரோ சிலர் பணமும், பலமும் சம்பாதிக்க சாமானியர்கள் கொள்ளும் மூடநம்பிக்கை என்றார்,
தன்னம்பிக்கை  இல்லாதோர் தேடும் மனத்தாங்கி என்றார்,

மனநிலை என்றார்,
ஓர்  ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்றார்,
உடல்நிலை என்றார்,

சக்தி  ஏற்றும் முறை என்றார்,
நினைத்ததை நடக்க வைக்கும் வழி என்றார்,
உயிர்நிலை  என்றார்,

விஞ்ஞானிகளுக்கு இன்னமும் எட்டாத மெய்ஞானம் என்றார்,
மதத்தைக் கடந்த மனவளர்ச்சி என்றார்,
படைத்தவனோடு  ஏற்படும் நேரடித் தனித்தொடர்பு என்றார்,

மனதை  அடக்கும் வழி என்றார்,
படைத்தவனுக்கு செய்யும் கடமை என்றார்,
படைத்தவன் கருணையை, புகழைப் பரப்புவது என்றார்,

அனைத்து  உயிரினங்களுக்கும் தான் செய்யும் சேவை என்றார்,
அனைத்து  உயிரினங்களுக்கும் தான் காட்டும் நன்றி என்றார்,
அடைய  வேண்டிய இறைநிலை என்றார்

இழந்து  விட்ட இயற்கை நிலை என்றார்,
மனதைக் கடக்கும் வழி என்றார்,
வாழ்க்கை செல்ல வேண்டிய பாதை என்றார்,

அனைத்தையும் தள்ளுவது என்றார்,
காலத்தைக்  கடப்பது என்றார்,
வாழ்க்கை  செல்லும் பாதை என்றார்,

வாழ்க்கை  என்றார்,
பாதை என்றார்,
பயணம் என்றார்,

அனைத்தையும் ஏற்பது என்றார்,
இந்தக் கணத்தில் வாழ்வது என்றார்,
கால  ஓட்டத்தோடு செல்வது என்றார்,

{இப்படித்தான் வருடத்திற்கு இரண்டு,மூன்று புது அர்த்தம் சொல்லுறார், எல்லாம் கடந்த காலமாக இருக்கே ... இப்போ என்னதான் சொல்றாரு?}

<இந்தக் கணத்தை முழுமையாக ஏற்று இந்தக் கணத்தில் இருக்கும்  வாழ்க்கைப் பயணம்>

(நம்மைப் போன்ற சாமானியர்கள் இதற்கு முயற்சி செய்யணும், அமையாவிட்டால் சரியான பயிற்சி செய்யணும், பக்குவம் வரும்போது அமையும்)

 [இதனால் என்ன பயன்? இதுக்கு செலவு செய்த பணத்திற்கும், நேரத்திற்கும்? எதாவது லாபம் இருக்கணுமே, அது என்ன?]
<வாழ்வை ஏற்க முடியாத ஒவ்வாமையால் வரும் பிரச்னைகள் வராது, பிறகு ...>
{இப்போ இது போதும்... தூக்கம் வருது... இன்னொரு நாள் பார்ப்போம்}

"மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின்றோர்க்கே."