நம் நாட்டில் தேர்தல் வழக்கம் போல திருவிழா தரும் உணர்வை தருகிறது. சமூகதளங்கள் வந்த பின், இந்த திருவிழா நம் கணினி திரையிலும் நடக்கிறது. இந்த திருவிழா சிறப்பிக்கும் வண்ணம், ஒவ்வொரு பிரபலமும் (?) ஆடிய ஆட்டம் மிக அருமையாக இருந்தது.
ஒரு கவிஞராக அறிமுகமான பிரபலம், புதிய கோணங்கள் மூலம், தினப்படி நிகழ்வுகளுக்கு, வண்ணம் தந்து கவர்ந்தவர், கட்சி வண்ணத்தை எழுத்துக்கும் பூசி, அவர் எழுத்துகளை படிக்கும் ஆர்வத்தை குறைத்து விட்டார். நாம் நம் நேரத்தை இங்கேயே அதிகம் செலவு செய்தாலும், முச்சந்தியில் நடக்கும் மூன்றாந்தர பேச்சுகள் நம்மை வந்து சேரும்படி பதிவுகளையும் பின்னூட்டங்களையும் இட்டு வந்தார். முக்கில் பேசப்படும் நான்காந்தர பேச்சுகளை அவரது நண்பர்கள் பதிவிடுகிறார்கள். நண்பர்கள் என்று பொதுவாக சொல்ல முடியாது, நானும் அவர் நண்பன் தான். அல்லக்கை போன்ற வார்த்தைகள் சரியா என்று தெரியவில்லை. தானும் தமிழை தங்கள் படைப்புகள் மூலம் வாழ வைத்துக் கொண்டிருப்பதாக சொல்லி கொள்பவர்கள், வன்தமிழால் செந்தமிழை கொல்கிறார்கள்.
திராவிட, கம்முனிச நாத்திகர்கள், மற்றும் சிறுபான்மையினரை காப்பாற்றுவதாக நம்பி வாழும் நண்பர்களும் மோடி எதிர்ப்பை தங்கள் முழு நேர எதிர்ப்பாக கொண்டு, இந்தியா காப்பாற்றப்பட வேண்டும் என்று நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி முடிவுகளையும், ஆருடங்களையும் பதிவுகளாகவும், பின்னூட்டங்களாக இட்டு முகநூலை நிறைக்கிறார்கள். அதற்கு பதில் சொல்கிறேன் என்று பெரும்பான்மை என்று நினைத்துக் கொள்ளும் சிறுபான்மை கூட்டங்களின் கூட்டத்தை சேர்ந்தவர்களும் மோடியால் இந்தியா உலக நாடுகள் மட்டுமல்ல பேரண்ட நாடுகள் அனைத்தை விடமும் வல்லரசாக மாறும் என்று நூற்றுக்கணக்கான ஆருடங்களையும், ஆராய்ச்சிகளையும் வெளியிடுகிறார்கள்.
அவற்றில் பல கருத்துகள் மிகவும் தரம் தாழ்ந்த தமிழால் சொல்லப்பட்டிருப்பது தான் நமக்கு உறுத்துகிறது. தரம் தாழ்ந்த தமிழ் மட்டுமே சொல்லப்படும்போது, நமக்கு கோபமும் வருகிறது. இப்படி பல வார்த்தைகள் சொல்லிவிட்டு நொண்டி சாக்குகளும் சொல்கிறார்கள் "இப்படி சொன்னாதான் அவனுக்கு புரியும். அவனுக்கு யோசிக்க தெரியாது. எனக்கு தாங்க முடியாத கோவம் வந்துருச்சு. ". சில நாட்கள் கழித்து வேறு எதோ ஒன்றால் தமிழ் அழியும் என்றும், காப்பாற்ற வழியும் யோசித்து பதிவிடுவார். இவர் தேர்தல் சுரத்தில் தமிழை அடித்ததை மறந்து விடுவார். நம் கவிஞரும் அப்படித்தான் கட்சி வேலை பார்த்த அதே வேகத்தில் மீண்டும் தமிழை வளர்க்க வந்து விடுவார்.
என் விருப்பம் என்னவென்றால் அடுத்த முறை இவர்களுக்கு தமிழ் உணர்வு வரும் சமயம் இவர்களுடைய வேகத்தால் தமிழை எத்தனை முறை குத்தினார்கள் என்பதை மீண்டும் படித்து அறிய வேண்டும்.
"Excuse me" அல்லது "Thank you" போன்ற வார்த்தைகளால் தமிழ் அழிந்து விடாது. சூடான காப்பியால் தமிழோ கலாசாரமோ அழிந்து விடாது, அதை "கொட்டைவடிநீர்" என்று சிந்திப்பதை விட, சொல்ல வந்ததை எப்படி மென்தமிழில் சொல்வது என்று பழகலாம். அதுவே தமிழ் கலாசாரத்தை காப்பாற்றும்.
இன்னமும் சில நாட்களுக்கு, சுரம் போனாலும் ஜன்னி மட்டும் மீதம் இருப்பது போல, வெற்றிக்களிப்பிலோ, தொல்விவலியிலோ சில பதிவுகள் வரும். அப்புறம் எல்லாம் சரி ஆகிடும் என்று நம்புவோம்

No comments:
Post a Comment