Wednesday, April 23, 2014

களமாடுகிறார்கள்


நம் நாட்டில் தேர்தல் வழக்கம் போல திருவிழா தரும் உணர்வை தருகிறது. சமூகதளங்கள் வந்த பின், இந்த திருவிழா நம் கணினி திரையிலும் நடக்கிறது. இந்த திருவிழா சிறப்பிக்கும் வண்ணம், ஒவ்வொரு பிரபலமும் (?) ஆடிய ஆட்டம் மிக அருமையாக இருந்தது.

ஒரு கவிஞராக அறிமுகமான பிரபலம், புதிய கோணங்கள் மூலம், தினப்படி நிகழ்வுகளுக்கு, வண்ணம் தந்து கவர்ந்தவர், கட்சி வண்ணத்தை எழுத்துக்கும் பூசி, அவர் எழுத்துகளை படிக்கும் ஆர்வத்தை குறைத்து விட்டார்.  நாம் நம் நேரத்தை இங்கேயே அதிகம் செலவு செய்தாலும், முச்சந்தியில் நடக்கும் மூன்றாந்தர பேச்சுகள் நம்மை வந்து  சேரும்படி பதிவுகளையும் பின்னூட்டங்களையும் இட்டு வந்தார். முக்கில் பேசப்படும் நான்காந்தர பேச்சுகளை அவரது நண்பர்கள் பதிவிடுகிறார்கள். நண்பர்கள் என்று பொதுவாக சொல்ல முடியாது, நானும் அவர் நண்பன் தான். அல்லக்கை போன்ற வார்த்தைகள் சரியா என்று தெரியவில்லை. தானும் தமிழை தங்கள் படைப்புகள் மூலம் வாழ வைத்துக் கொண்டிருப்பதாக சொல்லி கொள்பவர்கள், வன்தமிழால் செந்தமிழை கொல்கிறார்கள்.

திராவிட, கம்முனிச  நாத்திகர்கள், மற்றும் சிறுபான்மையினரை காப்பாற்றுவதாக நம்பி வாழும் நண்பர்களும் மோடி எதிர்ப்பை தங்கள் முழு நேர எதிர்ப்பாக கொண்டு, இந்தியா காப்பாற்றப்பட வேண்டும் என்று நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி முடிவுகளையும், ஆருடங்களையும்  பதிவுகளாகவும், பின்னூட்டங்களாக இட்டு முகநூலை நிறைக்கிறார்கள். அதற்கு பதில் சொல்கிறேன் என்று பெரும்பான்மை என்று நினைத்துக் கொள்ளும் சிறுபான்மை கூட்டங்களின் கூட்டத்தை சேர்ந்தவர்களும் மோடியால் இந்தியா உலக நாடுகள் மட்டுமல்ல பேரண்ட நாடுகள் அனைத்தை விடமும் வல்லரசாக மாறும் என்று நூற்றுக்கணக்கான ஆருடங்களையும், ஆராய்ச்சிகளையும் வெளியிடுகிறார்கள்.

அவற்றில் பல கருத்துகள் மிகவும் தரம் தாழ்ந்த தமிழால் சொல்லப்பட்டிருப்பது தான் நமக்கு உறுத்துகிறது. தரம் தாழ்ந்த தமிழ் மட்டுமே சொல்லப்படும்போது, நமக்கு கோபமும் வருகிறது. இப்படி பல வார்த்தைகள் சொல்லிவிட்டு நொண்டி சாக்குகளும் சொல்கிறார்கள் "இப்படி சொன்னாதான் அவனுக்கு புரியும். அவனுக்கு யோசிக்க தெரியாது.  எனக்கு தாங்க முடியாத கோவம் வந்துருச்சு. ". சில நாட்கள் கழித்து வேறு எதோ ஒன்றால் தமிழ் அழியும் என்றும், காப்பாற்ற வழியும் யோசித்து பதிவிடுவார். இவர் தேர்தல் சுரத்தில் தமிழை அடித்ததை மறந்து விடுவார். நம் கவிஞரும் அப்படித்தான் கட்சி வேலை பார்த்த அதே வேகத்தில் மீண்டும் தமிழை வளர்க்க வந்து விடுவார்.

என் விருப்பம் என்னவென்றால் அடுத்த முறை இவர்களுக்கு தமிழ் உணர்வு வரும் சமயம் இவர்களுடைய வேகத்தால் தமிழை எத்தனை முறை குத்தினார்கள் என்பதை மீண்டும் படித்து அறிய வேண்டும்.

"Excuse me" அல்லது "Thank you" போன்ற வார்த்தைகளால் தமிழ் அழிந்து விடாது. சூடான காப்பியால் தமிழோ கலாசாரமோ அழிந்து விடாது, அதை "கொட்டைவடிநீர்" என்று சிந்திப்பதை விட, சொல்ல வந்ததை எப்படி மென்தமிழில் சொல்வது என்று பழகலாம். அதுவே தமிழ் கலாசாரத்தை காப்பாற்றும்.

இன்னமும் சில நாட்களுக்கு, சுரம் போனாலும் ஜன்னி மட்டும் மீதம் இருப்பது போல, வெற்றிக்களிப்பிலோ, தொல்விவலியிலோ சில பதிவுகள் வரும். அப்புறம் எல்லாம் சரி ஆகிடும் என்று நம்புவோம் 

Sunday, December 30, 2012

பயிற்சிகள்


சுசியும் மற்ற ஆன்மிகவாதிகள் போல எப்போதும் பயிற்சிகள்  பற்றி நல்லபடியாக பேசுவார், அவ்வப்போது சில பயிற்சிகளை செய்வார். சில நாட்கள் கழிந்த பின்னர் ஏனோ பழைய பயிற்சிகளை நிறுத்திவிட்டு புதிதாக சில பயிற்சிகள் செய்வார். பயிற்சிகளை அவர் தனிமையில் செய்தாலும், அவற்றை ரகசியமாக செய்வதில்லை. எனவே அவரிடம் பயிற்சிகள் பற்றி அறிய சில கேள்விகள் கேட்போம்.


ஆன்மிக பயிற்சிகள் என்றால் என்ன?
நம் உடல்களை நல்லபடியாக பாதுகாத்து வைத்துக்கொள்ளவும்; உடல்களின்  திறன்களை அதிகரிக்க செய்யவும்; அதிகரித்த திறன் கொண்ட உடல்கள் கொண்டு பொதுவாக செய்யவியலாத அதிசயம் போன்ற செயல்களை செய்வதற்கும், அனுபவ ஞானிகளால் வரையறுக்கப்பட்ட முறைகளை நாம் தொடர்ந்து பயில்வதே ஆன்மிக பயிற்சிகள் ஆகும்.


உடல்கள்?
நம் முன்னோர்கள், நாம் கண்களால் காணும் இந்த உடல் (பரு உடல்) தவிர மேலும் நான்கு உடல்கள் நமக்கு இருப்பாதாக அறிந்து அறிவுறுத்தியுள்ளனர். மற்ற நான்கு உடல்களை நாம் துவக்கத்தில் நம்பிக்கையால் அறிந்துகொண்டு, பின்னர் சில சரியான பயிற்சிகள் மூலம் அனுபவத்தாலும் உணரமுடியும்.
நம்முடைய மனம், புத்தி போன்றவையும் நம் உடல்களே. நம் பிராண சக்தியும் ஒரு உடலே. இந்த ஐந்து உடல்கள் பற்றி மேலும் அறிய விரும்புபவர்கள் பஞ்சகோசம் என்றால் என்ன என்று தேடி அறியுங்கள்.


அனைத்து உடற்பயிற்சிகளும் ஆன்மிக பயிற்சிகளா?
பல உடற்பயிற்சிகளும் ஆன்மிக பயிற்சிகளாக ஏற்கக்கூடியவையே.


பொதுவான உடற்பயிற்சிகளுக்கும் ஆன்மிக பயிற்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
பொதுவான உடற்பயிற்சிகள் நம் ஒவ்வொரு உடலையும் தனித்தனியே பார்க்கின்றன. ஆன்மிகப்பயிற்சிகள் ஐந்து உடல்களையும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று பார்க்கின்றன.
பொதுவாக உடற்பயிற்சிகள், ஒரு உடலை குறிவைத்து செய்யப்படுகின்றன. அவற்றை செய்யும்போது, பக்கவிளைவாக பிற உடல்களும் பயன்பெறலாம். ஆன்மிக பயிற்சிகள் அனைத்து உடல்களையும் குறிவைத்து செய்யப்படுகின்றன.
பொதுவான உடற்பயிற்சிகள் ஒரு உடலை பலப்படுத்திக்கொண்டே வேறு ஒரு உடலை பலவீனப்படுத்தலாம். நல்ல ஆன்மிகபயிற்சி எந்த உடலையும் பலவீனப்படுத்தாது.


ஆன்மிகப்பயிற்சிகளை யாரிடம் கற்கலாம்?
பயிற்சியை செய்யத்தெரிந்து, சொல்லிக்கொடுக்கவும் தெரிந்த எவரிடமும் கற்கலாம். அவர் நல்லொழுக்கம் கொண்டவராக இருப்பது அவசியம், அவர் ஒழுக்கத்தில் உங்களுக்கு சந்தேகம் வருமாயின் அவரைவிட்டு விலகிவிடுங்கள். அவர் அந்தப்பயிற்சியை பலகாலம் பயின்றவராக இருப்பதும்; அவர் ஒரு பாரம்பரியம் கொண்டவராக இருப்பதும், அவர் தகுதியினை கூட்டும்.


ஆன்மிகப்பயிற்சிகளை பணம் செலவழித்து கற்கலாமா?
உங்களால் செலவு செய்யமுடியும் என்றால் செய்யலாம். தட்சிணை கொடுப்பதும், சிலசமயங்களில் கேட்டு வாங்குவதும் பண்டையகாலம் முதல் நடைமுறையில் உள்ள ஒன்றே.


நமக்கேற்ற நல்ல ஆன்மிக பயிற்சியை அடையாளம் காண்பது எப்படி?
நமக்கு ஏற்படும் அனுபவங்களே நமக்கேற்ற நல்ல ஆன்மிகப்பயிற்சிகளை நமக்கு அடையாளம் காட்டும். நாம் நல்ல பயிற்சிகளை செய்யும்போதும் நல்லனுபவம் தரும், பின்னர் நம் தினசரி வாழ்வின் அனைத்து அனுபங்களின் தரத்தையும் உயர்த்தும்.
நல்லப்பயிற்சிகளை தொடர்ந்து செய்யும்போது, செய்பவர் மட்டுமின்றி அவருடன் தினசரி பழகும் மற்றவர்களும், அவரிடம் ஒரு நல்ல மாற்றத்தை, முன்னேற்றத்தை கவனிப்பார்கள். ('தொடர்ந்து செய்யும்போது' என்பதற்கு காலஅளவு தேவை, அது ஒருவாரம் முதல் மூன்று மாதங்களே. நீங்கள் வாழ்நாள் முழுவதும் செய்து பின்னர் அவை நல்ல பயிற்சியல்ல என்று அறிவீர்களேயானால் அதனால் உங்களுக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை)
நம் தினசரி வாழ்வின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவிடாமலோ அல்லது அனுபவிக்க முடியாதபடியோ செய்யும் எந்தப்பயிற்சியும் நல்ல பயிற்சியல்ல.


மந்திர தந்திரங்களும் பயிற்சிகளா?
தந்திரம் என்பதற்கு வேறு அர்த்தங்கள் இருப்பினும், பலகாலமாக நுட்பம் என்கிற பொருளிலேயே ஆன்மிகவாதிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். தந்திரங்களையே நாம் பயிற்சியாக செய்கிறோம். மூச்சை கவனிப்பதும் ஒரு தந்திரமே. நம் முன்னோர்கள் நமக்கு பல தந்திரங்களை அளித்துள்ளனர். ஒரு தந்திரம் பலபடிகள் கொண்டதாகவும் இருக்கலாம், உதாரணத்திற்கு சூரியநமஸ்காரம். தந்திரங்கள் பற்றி மேலும் அறிய விரும்புபவர்கள் 'விஞ்ஞான பைரவ தந்திரா' எனப்படும் பண்டைய வடமொழி நூலினை  (மொழிபெயர்ப்பினை) தேடி படியுங்கள். அதில் நாம் நினைத்துப்பார்க்க முடியாத பலன்களை தரக்கூடிய எளிதாக தோன்றும் தந்திரங்கள் பல உண்டு.
மந்திரங்களையும் தந்திரங்களில் பயன்படுத்துவது உண்டு. மந்திரங்களுக்கு நம்முடல்கள் தாண்டிய விசயங்களையும் பாதிக்கும் சக்தி உண்டு. எனவே நல்ல குரு அல்லது வழிகாட்டி துணைகொண்டே சில மந்திரங்களை  பயிலவேண்டும்.


பொதுவாக இங்கு ஆசிரமங்களிலும், ஆன்மிக நிறுவனங்களிலும் கற்றுத்தரப்படும் தந்திரங்கள் எந்த வகை?
இத்தகைய நிறுவனங்களில் பொதுவாக பரு உடல் நலம் சம்பந்தப்பட்ட தந்திரங்களே கற்றுத்தரப்படுகின்றன. பரு உடல் அங்கங்கள் கொண்டு செய்வதும், மூச்சுப்பயிற்சிகளும்.
சில இடங்களில் பிராண உடல், விஞ்ஞான உடல் ஆகிய இரண்டுக்கும் பயிற்சியளிக்கக்கூடிய தந்திரங்களும் கற்றுத்தரப்படுகின்றன.
முன்பே சொன்னதுபோல, நல்ல பயிற்சிகள் அனைத்து உடல்களுக்கும் நன்மை தரும்.


பயிற்சி செய்வதற்கான காலநேரமும் அளவும் என்ன?
பயிற்சிக்கான காலநேரமும் அளவும் ஒவ்வொரு தந்திரத்திற்கும் மாறும். சில பயிற்சிகள் நாள் முழுவதும் செய்யலாம். பயிற்சியின் காலஅளவு உங்கள் தினசரி வாழ்வை பாதிக்குமெனில், அதிக அளவு என்பதை அறிக.


பழகிய தந்திரங்களை நிறுத்திவிட்டு புதிய தந்திரங்களை ஏற்கலாமா?
சரியான காரணம் இருக்குமேயானால் கட்டாயம்ஏற்கலாம், ஏற்க வேண்டும்.
உங்களுக்கு ஒத்துவராத தந்திரத்தை நீங்கள் கட்டாயம் நிறுத்தவே வேண்டும். இப்போது நீங்கள் பயிலும் தந்திரத்தைவிட அதிக பலன் தரக்கூடிய தந்திரம் உங்களுக்குக் கிடைத்தாலும் பழையதை நிறுத்திவிட்டு புதியன தொடங்கலாம்.
ஒரு தந்திரம் அனைவருக்கும் சிறந்த பலன்களை தருவதில்லை. அவரவர் அவரவருக்கேற்ப, தற்போதைய நிலைக்கேற்ப தந்திரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதை அவ்வப்போது சீர்தூக்கிப் பார்த்து தேவை என்றால் புதிய தந்திரம் தேட வேண்டும்.
ஒரு தந்திரத்தை கைவிடுவதால் நீங்கள் எந்த தவறும் செய்வதில்லை, அந்த தந்திரத்திற்கோ, அதை கற்பித்தவருக்கோ அல்லது பயிலும் மற்றவர்களுக்கோ நீங்கள் எவ்வித தீங்கோ அல்லது துரோகமோ செய்வதில்லை என்பதை எப்போது நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு கூட்டம் உங்கள் மீது ஒரு தந்திரத்தை திணித்தாலோ அல்லது ஒரு தந்திரத்தை நீங்கள் கைவிடுவதை அனுமதிக்காமல் மறுத்தாலோ ... உடனடியாக அந்தக்கூட்டதிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்யுங்கள்.


தந்திரங்களை மாற்றலாமா?
பல தந்திரங்கள் பல ஆண்டுகளாக பல ஞானிகளால் ஆராய்ந்து உருவாக்கப்பட்டவை. அவற்றை அப்படியே செய்வதே நல்லது.


குரு அல்லது வழிகாட்டி அவசியமா?
சில தந்திரங்கள் ஆபத்தான பக்கவிளைவுகளை கொண்டவை. அவை வழக்கமாக நம் உடல்களில் உள்ள சக்திகளை தாண்டி வேறு சக்திகளை கையாளும். அப்படிப்பட்ட தந்திரங்களுக்கு குரு அல்லது ஒரு வழிகாட்டி தேவை. பிற சக்திகள் கொண்டு நம் உடல்களையும், வாழ்வையும் மேம்படுத்த செய்யும் பயிற்சிகள் தவிர்க்கப்படவேண்டியவை. (பெரிய கோவில்களில் வைத்து வணங்கப்படும் தெய்வங்களும், உங்கள் குலதெய்வங்களும் ஆபத்தில்லாதவை, நன்மை மட்டுமே செய்யக்கூடியவை.)
உடல் அங்கங்கள் கொண்டு உடல்களுக்குள் செய்யப்படும் பயிற்சிகள் பொதுவாக ஆபத்தில்லாதவை, அவை தவறாக செய்யப்பட்டாலும், உடல்பிடிப்பு போன்ற சிறிய பாதிப்பையே ஏற்படுத்தும்.
குரு அல்லது வழிகாட்டியை தேர்ந்தெடுக்கும்போது மிகுந்த கவனம் தேவை. தந்திரங்களால் வரும் தீய பாதிப்புகளைவிட தவறான ஆட்களால் வரும் தீய பாதிப்புகளே அதிகம்.

Sunday, September 2, 2012

பாடல் ௫௧


உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்க்
கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவா யருள்வாய் குகனே 

பாடல் ௫௦


மதிகெட் டறவா டிமயங் கியறக்
கதிகெட் டவமே கெடவோ கடவேன்
நதிபுத் திரஞா னசுகா திபவத்
திதிபுத் திரர்வீ றடுசே வகனே 

பாடல் ௪௯


தன்னந் தனிநின் றதுதா னறிய
இன்னம் ஒருவர்க் கிசைவிப் பதுவோ
மின்னுங்  கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே 

பாடல் ௪௮


அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்
பிறிவொன் றறநின் றபிரா னலையோ
செறிவொன் றறவந் திருளே சிதைய
வெறிவென் றவரோ டுறும்வே லவனே 

பாடல் ௪௭


ஆறா றையுநீத் ததன்மேல் நிலையை
பேறா அடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா உலகங் குளிர்வித் தவனே