Tuesday, September 13, 2011

முகநூலில் சென்ற வாரக்கடைசி


முகநூலில் என் வாரக்கடைசி கழிந்ததைப் பற்றி. என்னமோ மூணாறில் கழித்தது போல இதற்கெல்லாம் குறிப்பும் கட்டுரையும் தேவையா என்று நினைப்பீர்கள். மூணாறுக்கும் பிற தென்னிந்திய மலைமீதிருக்கும் சுற்றுலாத்தலங்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறதா, மனிதன் செய்திருக்கும் சில வித்தியாசங்கள் தவிர ? குட்டையாகவே வைக்கப்படும் தேயிலைத் தோட்டங்களை ஏனோ என்னால் இயற்கை என்று ரசிக்கமுடிவதில்லை, பசுமை என்று வேண்டுமானால் சொல்லலாம். முகநூலில் கிடைக்கும் அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒருவிதம்.

இதில் "அவர்" என்ற வார்த்தை ஒவ்வொரு முறை உபயோகிக்கப்படும்போதும் வெவ்வேறு அவன், அவளை குறிப்பிடும். அது நீங்கள் சந்தித்த ஒருவரை நினைவூட்டினால், அது உண்மையாக இருக்கலாம், ஆனால் அது அவராக இல்லாமலிருக்கவே அதிக வாய்ப்புள்ளது. அதே போல "அந்தக்குழு" என்பதும்.

வாரக்கடைசி ஆரம்பம்
வெள்ளிக் கிழமை மாலை வீடு திரும்பியதும் ஒரு பரபரப்பு, சிலவருடங்கள் கழித்து ஒரு நல்ல நண்பனுடன் காலம் கழிக்க செல்வது போல. இத்தனைக்கும் மதியம் தான் மின்னஞ்சல்கள் பார்த்து முகநூல் உலகில் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை என்பதை அறிந்திருந்தேன். 

என்ன இருந்தாலும் இந்த விண்டோஸ் ரொம்ப மெதுவாத் தான் ஆரம்பிக்குது...

ஒருவழியாக முகநூல் முகப்பு பக்கத்தை பார்த்தாச்சு :). 267 மிக சமீபத்தியது என்று காட்டுது, எல்லோரும் சுறுசுறுப்பா ஏதோ சொல்லிகிட்டே இருக்காங்க. 2 அஞ்சல்கள், என் பதிவுகள், பின்னூட்டங்கள் சார்ந்த 12 நிகழ்வுகள், ஒரு புதிய நண்பர் விழைவு. புதிய நண்பரில் ஆரம்பிக்கிறேன்.

"அப்பா எனக்கு இந்திய வரைபடமும், கறுப்பு மைப் பேனாவும் வாங்கணும்" ...
"சரி வாங்கலாம்" ...
(இந்திய வரைபடமும் கறுப்பு மையும் கேட்கும் மகன் ... நேற்றைய துக்க சம்பவத்தாலா ?) என்று ஒரு நிலைப் பதிவு வெளியிட்டால் நண்பர்களுக்கு பிடிக்குமா? வாக்கியம் இன்னும் கொஞ்ச நல்லா வரணுமோ? முதலில் இந்த புதிய நண்பரில் ஆரம்பிப்போம், அப்புறம் இதை யோசிப்போம்.

புதிய நண்பரின் சுயவிவரத்தையும், சுவரையும் பார்த்தால் ஆபாசமான படங்களோ, பதிவுகளோ இல்லை, ஏற்கத்தக்க அளவிற்கு நல்லவராகத் தான் தெரிகிறார், நட்பை ஏற்கிறேன். என் பதிவிற்கு நான்கு பேர் விருப்பு (Like) தெரிவித்துள்ளார்கள் (லைக்குக்கு லைக் போட முடிந்தாலும் நல்லாத் தான் இருக்கும்... நன்றியுணர்வு! ), கொஞ்ச நேரம் முன் இருந்த அலுப்பு சுத்தமா காணாமல் போய்விட்டது. என் பின்னூட்டங்களுக்கு வந்த பின்னூட்டங்களுக்கு என் புதிய பின்னூட்டங்கள் ...

"ஏங்க இன்னைக்கு வெளியில் போய் சாப்பிடலாமா?"
"சரி சாப்பிடலாம்"
(ஹோட்டலில் ஒழுங்காவா சமைக்கிறான்னு கேட்டாலும் இந்த பெண்களுக்கு அங்கு செல்லும் விருப்பம் ஏனோ குறைவதில்லை) இந்த நிலைப்பதிவு பற்றியும் அப்புறம் யோசிப்போம்.

மிக சமீபத்தியது பார்க்கிறேன் ... ஒரு விசயத்தை எத்தனை விதமாக பார்க்கிறார்கள், சிந்திக்கிறார்கள் ... ஒரு பெரிய கூட்டம் ஒரு விசயத்திற்கு உயிரைக் கொடுத்து பத்திபத்தியாக வாதிடும்போது, இன்னொரு கூட்டம் உயிர்போகும் விசயத்தை சந்தோசமாக ஒற்றை வரிகளில் பேசுகிறார்கள். உண்மையிலேயே இப்படி எல்லாம் யோசிப்பாங்களா இல்லை சுவாரசியமான பதிவிட இப்படி யோசிப்பாங்களா?  இதோ சில கவிதைகள் ...

"ஏங்க கிளம்பலாமா?"
"இதோ பத்து நிமிசம் "

அவர் ஒரு பெண்கவிஞர், நிறைய கவிதைகள் எழுதுவார், சில காதல் கவிதைகள், மற்ற பல பெண்கவிஞர்கள் போலவே அம்மா பற்றியும், நட்பு பற்றியும் நிறைய கவிதைகள். சில சமயம் இந்த இரண்டிற்காக தன் வாழ்வையே தியாகம் செய்து விட்டாரோ என்று தோன்றும் ... அப்படியெல்லாம் இருக்காது, ஒரு பெண் இதைப் பற்றி எழுதினால் தான் நல்ல பெயரோடு இருக்க முடியும் போல ...

அவர் ஒரு ஆண்கவிஞர், எப்போதும் காதல்தோல்வி கவிதைகளும், ஏமாற்றும் பெண்கள் பற்றிய கவிதைகளும்தான் எழுதுவார். நான் ஆயிரம் ரூபாய் பந்தயம் வைக்கிறேன், அவர் இதுவரை ஒரு பெண்ணுடனும் பழகியிருக்கவே மாட்டாரென்று, அப்புறம் எங்கே காதல், தோல்வி எல்லாம்.

படங்களுடன் இணைந்த கவிதைகளும் இருக்கு, சிலது கண்ணையும் கருத்தையும் சேர்த்து கவருது.

"சாப்பிட வாங்க"
"வெளியிலே போலாம்னு சொன்னே?"
"பத்தரை மணிக்கு எங்க போக? அதான் அவல் தாளிச்சுட்டேன்"
"அப்படியே ஒரு கப்பில் ஸ்பூன் போட்டு இங்கயே குடுத்துடு"

அந்தக் குழுவில் எதோ காரசாரமான விவாதம். நினைத்த மாதிரியே அவர் தான் அதை ஆரம்பித்துள்ளார். அவர் வீட்டு தண்ணீர் குழாயில் காத்து வந்தாலும், அவருக்கு வாயுக் கோளாறு வந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் இந்திய ஏகாதிபத்தியமும், மேட்டுக்குடி மக்களும்தான் காரணம் என்று தினமும் திட்டி எதாவது பதிவு போடுவார், இப்படியும் அப்படியுமா ரெண்டுமூணு பேர்... ஒரே கருத்து மழை... நானும் கலந்துகிட்டு நாட்டைக் காப்பாற்ற ஆரம்பித்தேன்...

"நான் போய் படுக்கப் போறேன், நீங்க ?"
"இதோ பத்து நிமிசம் ... அந்த படம் முடிஞ்சிடுச்சா?"
"ஒரு மணி ஆகப்போது ... இந்த அவல் பாதி காஞ்சி போச்சு, இதை கூட திங்க நேரம் இல்லாம எவகூட இந்நேரத்துக்கு பேச்சு?"
"அதெல்லாம் இல்லை ... இதில கொஞ்சம் ரசம் ஊத்தினா சரியாகுமா?"
"!@$#%%^"
"சரி சரி நான் இதை சாப்பிட்டுட்டு கொண்டு போய் கழுவபோடுறேன், நீ போய் படு, நான் அரை மணியில் வருவேன்"

இந்த குழுக்களில் நடக்கும் விவாதங்கள் சுவாரசியமானவை, அவரவருக்கு பொழுதுபோகாத நேரங்களிலும், ஒரு மாற்றம் (break) தேவைப் படும்போதும் வந்து ஒரு பெரிய பிரச்னை பற்றி தீவிரமான கருத்துகள் சொல்லி சண்டையிட்டு, வேறு உருப்படியான வேலை வந்ததும் விட்டுவிட்டு சென்றுவிடுவோம். இப்படி சண்டை போட என்றே சில பிரச்னைகளும், அதன் இரண்டு பக்கங்களுக்கும் ஆட்களும் எப்போதும் உண்டு ... ஆத்திக மதம் x நாத்திக மதம் ;  இந்திய தமிழர்கள் X இந்தியவாழ் உடோபிய தமிழர்கள்; தற்கொலை X தீக்குளிப்பு; தூக்குதண்டனை வேண்டும் X எங்க கூட்டத்துக்கு மட்டும் வேண்டாம் ... அதுக்கான சரியான குழுவில் போய் ஒரு வரி பதிவு போட்டால்போதும் நாலு மணி நேரம் கூட நீங்க விவாதம் செய்யலாம்.

அரட்டையில் (chat), வணக்கம் சொல்கிறார் நண்பர். அவர் நீண்ட நாள் நட்பு, ஆன்மிகம் பற்றி நிறைய பேசுவோம், இன்று மனிதன் கடவுள் மேல் கொள்ளும் காதலையும், எதிர்பால் மேல் கொள்ளும் காதலையும் ஒப்பிட்டு பேச ஆரம்பித்தோம்.
(ஆண்மையை காட்டவும், ஆன்மீகங்காட்டவும் காதல் தேவை ) இந்தக் கேவலமான நிலைப்பதிவை போட்டால் ரொம்ப திட்டு வாங்க வேண்டி வரும்.

"இன்னும் அங்க இருந்து எழலையா ?"
"உனக்கு தூக்கம் வரலையா?"
"ஒரு தூக்கம் போட்டு எழுந்தாச்சு, தண்ணி குடிக்க வந்தேன் "
"அதுக்குள்ளே ஒரு தூக்கமா?"
"நாலரை மணி ஆச்சு, நாளைக்கும் எங்கேயும் போகப் போறதில்லை, முழுநாளும் தூங்கப் போறீங்க"
"இதோ பத்து நிமிசம் ... நீ போய் படு வந்துருவேன் "

இடுப்பு கொஞ்சம் வலிப்பது போல இருக்கு, கொஞ்சம் நடந்து போய்வரலாம், இந்நேரம் டீக்கடை திறந்திருக்கும். கடையில் நிற்கும்போது தூக்கம் தள்ளுது ... திரும்ப வரும்போது ... காதல் பற்றி ஒரு கட்டுரை எழுதினால் என்ன? ... சில வரிகளும் வந்து விழ ... தூக்கம் காணாமல் போனது.

கட்டுரை நல்லாத்தான் வருது ...

"தூங்கவே இல்லையா?"
"படுத்துப் பாத்தேன், தூக்கம் வரல, பசி போல, டிபன் சாப்பிட்டுட்டு படுக்கலாம்னு... எனக்கும் காப்பி போடு "

ஒருவழியாக கட்டுரை முடித்து வெளியிடுவதற்குள் மதியம் இரண்டாகி, மதிய உணவும் முடித்து விட்டு படுக்க போகுமுன் ...

"திரும்ப அங்க எங்க போறீங்க "
"இரு புது கட்டுரைக்கு எத்தனை பேர் பதில் போட்டிருக்காங்கன்னு பாத்துட்டு போய் படுக்கிறேன்"
"பத்து நிமிசம் தாண்டினா நான் சுவிட்சை நிறுத்திடுவேன் "
"சரி"

மூன்று மணிக்கு கணினியை நிறுத்திவிட்டு படுக்கப் போனேன்.

"ஆறு மணி ஆச்சு, விளக்கு வைக்கிற நேரம், எழுங்க, இன்னைக்கு சீக்கிரம் சாப்பிட்டுட்டு எட்டு மணிக்கே படுத்துடுங்க "
"சரி"

அந்தக் கட்டுரைக்கான பின்னூட்டத்தில் ஒருவர் கேள்வி கேட்டிருக்கார், பதில் சொல்லிவிட்டு, பின்னூட்டங்களுக்கு விருப்பு தெரிவித்துவிட்டு முகப்பு பக்கம் வந்தால் மிக சமீபத்தியது நிறைய இருக்கு ... படித்து ... பார்த்து ... பிடித்ததற்கு விருப்பு, சிலதுக்கு கருத்து ...

"இப்போ சாப்பிட வரப்போறீங்களா இல்லையா? நீங்க வரவரைக்கும் நாங்க சாப்பிடப்போறதில்லை, பத்து மணியாகுது "
(நான் சாப்பிட வரும்வரை மற்றவர் உண்ணாவிரதம் - குடும்பப் பாசம் !!! ) குடும்பத்தில் சண்டை வருவதற்குள் சாப்பிட போறேன், அப்புறம் வந்து இந்த நிலைப்பதிவைப் பற்றி யோசிப்போம் ...

சாப்பாடு முடிந்து முகநூல் வருவதற்குள் அந்த நிலைபதிவு மறந்து போச்சு. இப்ப கொஞ்ச நாளா இப்படித்தாங்க ஒவ்வொரு விசயமும் ஒரு நிலைப்பதிவா தெரியுது, அப்புறம் மறந்து போகுது ... மனநிலையை சோதிக்கணும் ...

"எனக்கு தூக்கம் வருது, எழுங்க "
"இதோ பத்து நிமிசம் ... நீ போய் படு வந்துருவேன் "
"இந்தக் கதையெல்லாம் ஆகாது, அதுவரைக்கும் நானும் இங்கேயே இருக்கேன்"
"ஒரு மணிக்கெல்லாம் எனக்கு தூக்கம் வராதே ... சரி இன்னைக்கு இது போதும்..."

தூங்கவே முடியவில்லை. கொஞ்சநஞ்ச விவாதங்களா? எல்லாம் மண்டைக்குள் ஓடுது... இதை அப்படி சொல்லிருக்கலாமோ ?

"இன்னும் எதோ யோசிச்சிட்டே இருக்கீங்க, தூங்கலையா?"
(மனைவிக்கு மட்டும் - தூரத்திலிருந்து நினைத்தாலும் தெரிகிறது; அருகிலிருந்து வேறு எதையாவது யோசித்தாலும் தெரிகிறது ... எப்படி?) 

ஞாயிற்றுக்கிழமை எழும்போது பதினொரு மணி ... தூங்கின மாதிரியே இல்லை ... முகநூல் பக்கங்கள் திரும்பித் திரும்பி வருது... வடிவேலு, கவுண்டமணி முகங்கள், தினமலர், தூக்குக்கயிறு இதெல்லாம் கனவில் வந்தா, அது ஒரு தூக்கமா? ... இதைத் தானே நாள் முழுசும் பார்க்கிறோம் ...

நேராக வந்து கட்டுரைக்கு எத்தனை விருப்பும், கருத்துகளும் என்று பார்க்க ஆரம்பித்தேன் ...

"இந்தக் காப்பியை குடிச்சிட்டு கிளம்ப ஆரம்பிங்க. இன்னைக்கு சமையல் இல்ல. நீங்க தூங்கும்போதே சாண்ட்விச் செய்து நாங்க சாப்பிட்டாச்சு, நேரா ஹோட்டல் போய் சாப்பிடுவோம், வர்ற வழியில மேப்பும், பேனாவும் வாங்கணும் "
(இன்னொரு உயிரைத் தன்னுடன் சேர்த்தான் என்றும் தொல்லையடா
இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா)

அவருடைய தாத்தா கோவையிலிருந்து அந்த கிழக்குப் பக்க தீவு நாட்டிற்கு சென்றவராம், அதன்பின் விடுமுறைக்கு தான் இங்கு வருவார்களாம், அரட்டையில் ஹாய் சொன்னார் ... மாலை நேர தேநீரோடு ...அவருக்கு ஏனோ என்மேல் நல்ல அபிப்ராயம், எனக்கு தூய அன்பு உள்ளம், நேர்மையானவன் என்றெல்லாம் சொல்கிறார் ... 

"மணி ரெண்டு ஆகுது, இந்த பொம்பளை கூட அரட்டை அடிக்கத் தான் இங்கேயே தவம் இருக்கீங்களா?" 

அப்படி இல்லை என்று நிரூபிக்க அரட்டை சரித்திரம் முழுதும் காட்டி ... 

"அப்புறம் எதுக்கு அவ உங்கள நல்லவன்னு சொன்னா?"
(நல்லா பழகினாலும் பழகாட்டியும் பெண்களை புரிந்து கொள்ள முடியாது என்பது புரிவதற்குள் நமக்கு வயதாகிவிடுகிறது)

நேரில் பேசிப் பழகினாலே கண்டு பிடிக்க முடியாதவற்றை, நாம் யோசித்து திருத்தி எழுதுவதிலிருந்து சில பெண்கள் கண்டுபிடித்துவிட்டதாக சொல்கிறார்கள் ... ஏமாறுகிறார்களா இல்லை ஏமாற்றுகிறார்களா என்றே தெரிவதில்லை ... எழுதினதைப் படித்துவிட்டு, இவ்வளவு வரிகள் எழுதுறே ஒற்றெழுத்து எங்கே போடணும்னு தெரியல என்று சொன்னால் நம்பும் படி இருக்கும், சும்மா இதெல்லாம் சொன்னால் சந்தேகம் வராதா?

எல்லோரும் கிளம்பி சாப்பிட்டு, கடைவீதியில் பேனாவும் வரைபடமும் வாங்கி ...

"சாயந்திரம் ஆகப்போது அப்படியே பீச் போயிட்டு கோவில் போலாமா?"
"எனக்கு வயிறு ஒரு மாதிரி இருக்கு, வீட்டுக்கு போவோம்"

அப்படி இப்படி சமாளித்து திரும்ப இங்கு வருவதற்குள் மூன்று மணிநேரம் வீண் ...

அப்புறம் இரவு உணவிற்காக எழுந்தேன் ... இரண்டு மணிக்கு படுக்கப் போக எழுந்தேன்.
காலையில் ஆறுமணிக்கு எழுந்தால் ... ஒரே தலைவலி, உடல்வலி, அலுப்பு ... விடுப்பெடுக்கணும் போல இருக்கு ... அடுத்த தலைப்பு போடவேண்டிய கட்டம் தாண்டிவிட்டது ...

வார ஆரம்பம் 
(வாரக் கடைசி முடிந்ததே தெரியவில்லை ... அதற்குள் வாரம் ஆரம்பித்துவிட்டதா?)

பார்த்த முதல் நண்பன் கேட்ட முதல் கேள்வி, அப்புறம் பார்த்த எல்லோரும் கேட்ட ஒரே கேள்வி - 
கண்ணு இப்படி சிவந்து பொங்கி இருக்கு, வெள்ளி முதல் ஒரே போதையா ?

போதை தான் போல ... நிம்மதியா தூங்க இடம் கிடைத்தால் போதும் போல இருக்கு ... 

(முகநூல் ஒரு போதை ... உங்கள் குடியையும், உடலையும், மனதையும் கெடுக்கும் )
இதுக்கு கட்டாயம் லைக் போடுவாங்க ... எல்லோரும் நம்மைப் போல போதையில தானே இருக்காங்க 

Monday, September 5, 2011

ஆதலினால் காதல் ஆய்வோம்


மனிதர்களைத் தவிர வேறு எந்த மிருக இனமும் காதலைப் பற்றி இவ்வளவு யோசித்து இருக்காது, கட்டாயமாக வேறெந்த இனத்தின் ஒவ்வொரு தனி மிருகமும் காதலைப் பற்றி தனிக் கருத்து வைத்திருக்காது. யோசிப்பதொடு நிற்காமால் கவிதை, கதை, ஓவியம், சிலை ... இன்னும் எத்தனையோ காதலால் மனிதன் படைத்துள்ளான். இதைப் பற்றி கொஞ்சம் யோசிப்போம். (தப்பில்லை, நாமும் மனிதர்கள் தானே ?)

யாரையும் குறிப்பிடாமல் இருக்க, நம் மரபுப்படி தலைவன், தலைவி என்றே ஆண், பெண்ணை அழைப்போம். இங்கு சொல்வதெல்லாம் ஒரே ஒரு தலைவன், தலைவி பற்றி மட்டுமல்ல. பல தலைவன் தலைவிகளின் வாழ்க்கையில் நடந்தவை, நடப்பவை. (தல, தலவலி என்று குறிப்பிட்டிருந்தால் சில மணமான தலைவர்கள் சிறிது மகிழ்ந்திருப்பார்கள்)

காதல் வருமுன் 
தலைவன் எழுந்து இரண்டு மணிநேரம் ஆகியும், ஏன் இன்னமும் அழைப்பு வரவில்லை என்று தெரியவில்லை. அதனால் வேறு ஒன்றும் செய்யாமல் காத்திருக்கிறான் தலைவன். இந்த தாமதத்தால் பிரச்னை ஒன்றும் இல்லை என்றாலும் அடுத்த வீட்டுத் தலைவனுக்கு எழுந்து பல்துலக்குமுன் வருகிறதாம், தனக்கு மட்டும் ஏன் வரவில்லை என்றொரு ஏக்கம்... இரண்டு காப்பி குடித்தாயிற்று, நடந்துபோய் புகையும் போட்டாச்சு ...

தலைவன் ஒரு இளைஞன். ஒவ்வொரு நண்பனும் நாலைந்து காதல் கதை சொல்கிறான். இவனும் பார்த்தது, பேசியதுக்கெல்லாம் கண்காது வைத்து சொல்லிப் பார்த்தாலும், திருப்தி வரமாட்டேங்குது. காதலைத் தேடி அலைகிறான், நேரிலும் வலைத்தளத்திலும். காதலுக்கு இரண்டுபேர் தேவை என்பதைக் கூட கண்டுகொள்ளாமல் தனியாகவே காதலிக்கிறான், அதில் தோல்வியும் அடைகிறான். காதல் அமையாததால் வாழ்க்கையில் இவனுக்கொன்றும் பிரச்னை இல்லை, என்றாலும் தனக்கு மட்டும் ஏன் இல்லை என்றொரு ஏக்கம்... (இதெல்லாம் தலைவிகளுக்கும் பொருந்தும், அப்படியே பால் மாற்றி படியுங்கள்). இல்லாத காதலுக்குக் கவிதை கூட எழுதுறான், அது தோற்றதாக கற்பனை செய்து காதல்தொல்வி கவிதை அதிகம் எழுதுறான், பெண்ணை நம்பாதே என்று ஞானக் கவிதையும் எழுதுறான்.

என்னவென்று தெரியாத போதே, ஆராய்ச்சி செய்ததாக நினைத்து ஒரு முடிவுக்கும் வருவதாகட்டும், இந்த விசயத்தில் தன் கருத்தே சரி என்று நினைப்பதில் ஆகட்டும், இருக்கு இல்லை, உண்மை பொய் என்று எதேனும் ஒரு பக்கம் சாய்ந்து சண்டை போடுவதில் ஆகட்டும் ... காதல் கடவுள் போலத் தான்.

காதல் வந்தபின் 
தலைவன் மதுக் கூடத்தில் நண்பர்களுடன் இருக்கிறான். அவர்கள் அனைவருக்கும் புதுப்பழக்கம், இருந்தாலும் ஒவ்வொருத்தனும் தான் தான் அதிகம் அனுபவிப்பதாக காட்டிக் கொள்வதில் பேரார்வம். சரக்கு பற்றிய அறிவை (?) கொட்டித் தீர்க்கிறார்கள் ... தன் சரக்கே சிறந்ததென்றும்... பல சரக்கு கலப்பதே சிறந்ததென்றும்... எதைக் கலந்தால் தலைவலி வராது என்றும்... சரக்கடிக்கும் முன்னும் பின்னும் செய்யவேண்டியவை பற்றியும் ... ஒரே சத்தம், மற்றவர் சொன்னது ஒருவருக்கும் புரியவில்லை.

காதலில் இருக்கும் இரண்டு தலைவர்கள் ஒரே மாதிரி பேசுவதில்லை. அவனுக்கு அவன் காதல் மட்டும் தெய்வீகமானது, மற்றவர் காதல் என்றால் ... சிலது இனக்கவர்ச்சி, சிலது காமம், சிலது மயக்கம், தன் உறவுக்காரத் தலைவியைக் காதலிப்பவர் கட்டாயமாக காமக்கொடூரன் தான். காதலில் இருப்பவர்கள் பெரிய போதையில் இருப்பவர் போலத் தான் இருப்பார்கள், (சத்யராஜ் பட வசனம் போல - அப்படியில்லாட்டி இந்தக் கருமத்தை எதுக்கு குடிக்கணும்?) பேசுவார்கள். காதல் ஆழமானால் மற்றவற்றை தியாகம் செய்வார்கள். அருகில் இருக்கும்போது காமம் வரும், விலகி இருக்கும் போது வேறு குணங்களை மனம் போற்றும், குறை எப்போதும் தெரியாது. 

தன் குறைகள் தெரியாமல் மறைவதாகட்டும், பிறர் குறைகளைக் கண்டு கோபம் வருவதிலாகட்டும், மற்றவருக்கெல்லாம் இங்கிதம் தெரியவில்லை என்பதிலாகட்டும், மற்றவரெல்லாம் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது என்பதிலாகட்டும் ... காதலிப்பது வாகனம் ஓட்டுவது போலத்தான்.

காதல் வாழ்க்கை 
தலைவன் மதுக்கூடத்தில் தனியாக இருக்கிறான். முன்பு போல ஆரவாரம் இல்லை, அமைதியாக குடிக்கிறான். இப்போதெல்லாம் போதை கண்ணை மறைப்பதில்லை, நிதானமாக இருப்பது போலவும் இருக்கு இல்லாதது போலவும் இருக்கு. குடித்தாலும் குடிக்காவிட்டாலும் ஏனோ லேசான எரிச்சல் நிரந்தரமாக இருக்கத் தான் செய்யுது. போதையில்லாமல் வாழமுடியாது போல இருக்கு.

தலைவனும் தலைவியும் தாங்கள் இணைந்ததை உலகிற்கு அறிவித்துவிட்டனர், சிறிய விருந்தோடு. வழியில் பல எதிர்ப்புகள், தடைகள், புண்கள், வலிகள். சில புண்கள் தழும்பு விட்டே ஆறிப்போகின்றன, தோல் முன்புபோலவே இல்லை. தலைவன் வரும்போது தலைவி குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கிறாள், தலைவி வரும்போது தலைவன் காலைக்குள் முடிக்கவேண்டிய காரியத்தில் மூழ்கியுள்ளான். நேரமில்லாமை மட்டுமல்ல வேறுபல பிரச்னைகளையும் ஒன்றாக சமாளிக்கவேண்டியுள்ளது. முன்பு போல இணைந்திருந்தால் உலகம் மறைந்துபோவதில்லை, கூடவே இருந்து கொண்டு தானிருக்கிறது. முன்பு தெரியாத குறைகள் தெரிந்தாலும், உண்மைக் காதலானதால் பிரிய மனமில்லை.

வீரியம் குறைந்தாலும் வெறுக்க முடியாததிலாகட்டும், குறைகள் இருந்தாலும் பிரிய முடியாததிலாகட்டும், பிரிய வேண்டி வந்தாலும் பிரிய மனமில்லாது போவதிலாகட்டும் ... காதலும் நம் தேகம் போலத் தான்.

காதலின் முடிவு 
அவன் இப்போதெல்லாம் குடிப்பதையே மறந்து வாழ்கிறான். மகிழ்ச்சி போதையால் வரவில்லை, மகிழ்ச்சி போதையை மேம்படுத்தியதை உணர்ந்தான், மகிழ்ச்சிக்கு போதை தேவையில்லை என்று அறிந்துகொண்டான். ஆனால் எதையும் அவன் மறக்கவில்லை, மனதுக்குப் பிடித்த நண்பர் வந்தால் பழங்கதை சொல்கிறான்.

தலைவனும் தலைவியும் பேசிக்கொள்வது கூட அரிதாகிவிட்டது இப்போதெல்லாம். சில சமயம் ஒருவரை பிரிந்து மற்றவர் ஒருவாரம் கூட ஏதோ மருத்துவமனையில் கழித்துள்ளார்கள் ... பேரன்களுக்கு வசதிப்படும்போது கூட்டிச் சென்று காட்டுகிறார்கள், மற்ற நேரமெல்லாம் நினைவுகளோடும், வேண்டுதல்களோடும் தனிமையில் காலம் கழிகிறது. இந்த முறை அதிக மோசம்போல உள்ளது, அனைவரும் மிகவும் பரபரப்பாக இருக்கிறார்கள். நிறுத்திக் கேட்டாலும் பதில் சொல்லாது பரிதாபமாக பார்க்கிறார்கள்... படுக்கவைத்தே அழைத்து வந்தார்கள் வீட்டிற்கு ... கடைசி நிமிடம் உடனிருந்து பார்க்க முடிந்தாலும் ...

நம்மிடம் கேட்டு வராததிலாகட்டும், நம்மைக் கேட்டு முடியாததிலாகட்டும், ஆரம்பித்தால் முடிவு வரை இருப்பது தான் தர்மம் என்பதிலாகட்டும் ... காதல் நம் வாழ்க்கை போலத்தான்.

சுயம்பு சித்தன் - ஒரு ஆய்வுக் கட்டுரை


சுயம்பு சித்தன் என்பவன் எவனா இருந்தா எனக்கென்ன, ஏதோ பதிவுகள் வெளியிடுகிறான், பிடித்தால் படிக்கிறேன், அவ்வளவு தான், அவனைப் பற்றி தெரிந்து என்ன செய்யப் போறேன் என்றிருப்பவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்.

சுயம்பு சித்தனின் சமுதாய பிரக்ஞை 
அப்படி எதுவும் அவனுக்கு கிடையாது. இதுவரை இரண்டே இரண்டு பிரச்னைகளுக்குத் தான் அவன் பதிவுகள் வெளியிட்டிருக்கான் - இந்தியாவிற்குக் கறுப்புக்கொடி மற்றும் தீயில் கருகிய செங்கொடி. வேறு எதுவும் அவனை பாதித்ததாக தெரியவில்லை. அடுத்து எப்போ அவனுக்கு சமுதாய உணர்வு வரும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
கறுப்பு 
அவன் ஒரு சிறுவிவசாய கூட்டுக்குடும்பத்தை சேர்ந்தவன். நன்றாக பேசும் மனைவி பலமுறை சொல்லியும் பிரிந்து போகாதவன். சொத்து பிரித்துப் போனால் வாழலாம். கடனை பிரித்துப் போய் அழிவதற்கு பதில், ஒன்றாய் சேர்ந்து உழைத்து வாழ விரும்புபவன். பங்காளிகளுக்குள் பல ஆயிரம் இருக்கும்னு போறவன்.
சிவப்பு 
அவன் சாவை அருகிலிருந்து பார்த்திருக்கான். ஐந்து மணி நேரம் ஆகியும், இறக்கும் முன் வாழும் ஆசையோடும், ஏக்கத்தோடும் பார்த்த தாத்தாவின் கண்களை மறக்க முயன்றுகொண்டிருந்தான். அந்தப் பிணத்திற்கு ஆடை அணிவித்தவன்.தோழிகளின் ஒப்பாரியின் பின்னணியோடு  அவன் ஆயா விடாது அழுதுகொண்டிருந்தாள். எல்லாக் கிழவிகளும் ஒரே குரலில் "உணர்ச்சியில்லா சடமே! புருஷன் செத்த அழுகிறவளுக்கு காப்பித் தண்ணியும், ரொட்டியும் தரியே, உனக்கு சாவு வீடுன்னா என்னன்னு தெரியுமா?" என்று திட்டினாலும் கவலைப்படாது, "ஒரு சாவு இந்த வீட்டிற்கு போதாதா?" என்று திருப்பி சத்தம் போட்டு, ஆயாவிற்கு ஊட்டி அவள் சர்க்கரை அளவு குறையாமல் காப்பாற்றிய திருப்தியோடு, கல்நெஞ்சக்காரன் போல முகம்காட்டி சென்றவன்.

முகநூலில் சுயம்பு சித்தன் 
அவன் +2 தமிழில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவன், கல்லூரித் தமிழ் படித்ததில்லை. தமிழ், ஆன்மிக அறிவை வளர்க்கவிரும்பி, முகநூலில் தமிழ் படைப்பாளி போலவோ, ஆன்மிகவாதி போலவோ தோன்றிய அனைவரையும் நண்பராக்க விழைந்தான், அதில் சிலர் அந்த விழைவை ஏற்றார்கள். நிறைய படிக்கிறான், சிலரிடம் ஆன்மிகம் விவாதிக்கிறான், படித்த/பார்த்த நல்லவற்றை பகிர்வான், சொந்தமாகவும் எழுதுவான்.

முகநூலில் சுயம்பு சித்தனின் நண்பர்கள் 
அவன் முகநூல் நண்பர்கள் யாரிடமும் தன் சுய விவரங்கள் சொன்னதில்லை. அவனுக்குத் தெரியும், ஏதோ ஒரு பெயரும், புகைப்படமும் காட்டினாலும் யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று.  
ஆனாலும், அவர்களிடம் அவன் எந்தப் பொய்யும் சொன்னதில்லை. இந்தப் பெயரும் புனைப்பெயர் என்பதை மறைக்காம சொல்லியிருக்கான். தன் புகைப்படமும் யாருக்கும் காட்டினதில்லை. புதிததாக நண்பர்கள் சேருகிறார்கள், சமுதாயக் கருத்தோ விமரிசனமோ எதிர்பார்த்து வந்திருந்தால் ஏமாற்றம் அடையலாம், அவனிடம் சமுதாய உணர்வு குறைவு. 
அவன் சொன்ன சில கருத்துகளுக்கு கொஞ்சம் எதிர்ப்பும் வந்தது. ஆபாசமாக பேசியவர்களை தடை (block) செய்துவிட்டான். எதிர்ப்பில் மிக வேடிக்கையானது, பிரபலம் ஒருவர் கிசுகிசு எழுதுவது போல அவனை தாக்குறார் ...(அண்ணா, அவன் டாவு விட்டு சுத்துரானுங்க, உங்கள மாதிரி பத்து அம்பது பேர் பேசுனா ரொம்ப ஆடுவானுங்க)

யார் அவன் 
அந்த அடுமனை (bakery) அருகில் கத்திரி புகை விட்டு, அங்கே இருக்கும் தினத்தந்தி படிக்கிறவன்...
திருவண்ணாமலையில் கறுப்பும், வெளுப்புமா தாடியோட நடக்கிறவன்...
அரைக்கை சட்டைப்பையில் பேனா சொருகி பேருந்துக்குக் காத்து நிற்பவன் ...
இன்னமும் சொல்லிகிட்டே போகலாம், இவங்களைப் போலத் தான் அவனும், பத்து முறை பார்த்தாலும் முகம் மனதில் பதியாது, முதல்முறையே எங்கோ பார்த்த மாதிரியும் இருக்கும், ஒரு சாதாரணமானவன். இவங்களை மாதிரியே வேடிக்கை அதிகம் பார்ப்பான். இவங்களை மாதிரியே எல்லாத்தையும் கவனிச்சு மனசுக்குள்ளே ஆய்வு செய்து, உணர்ச்சி காட்டாது பார்க்கும் முகம் அவனுக்கும். இவங்களை மாதிரியே எப்போவாவது ஒரு சொல் சொல்லுவான். அவ்வளவு தான், இவர்களில் எவனையாவது, எப்பொழுதாவது நீங்கள் கவனிக்க நேர்ந்தால், அவனை மாதிரி ஒருவன், விதிவசத்தால் கணினி உபோயோகித்து முகநூலில் பொழுதுபோக்கும் பதிவுகள் இடுகிறான் என்ற தோன்றினால், அவன் தான் இவன் அடையாளம். 

இந்த மாயா உலகில், நானே உருவாக்கிகிட்ட சின்ன மாயை தான் இந்த சுயம்பு சித்தன். அவன் இங்கே தமிழ் கற்று, எழுத பழகுகிறான். அனாவசிய அறிவுரை சொல்ல மாட்டான், முகநூல் நண்பர்களுக்கு நல்லது, கெட்டது செய்ய மாட்டான். நாளைக்கு பல பேர் போல புலம்பல் இலக்கியம் பழகலாம் என்று தோன்றினால், புலம்பு பித்தன் என்று பேர் மாற்றிக் கொண்டு புலம்புவான். அவனைப் பற்றி இதுக்கு மேல எதுவும் யோசிக்காமல், அவன் பதிவுகளை படிக்க முடிந்தால் படியுங்கள். இல்லை விட்டுவிடுங்கள். பிடித்தால் விருப்பம் (Like) தெரிவியுங்கள், கருத்தும் சொல்லுங்கள்.  நீங்கள் அவனை நண்பன் இல்லை என்று முகநூலில் குறிக்கும் வரை, உங்களை நல்ல நண்பராக மதித்து, உங்கள் பொழுது போகவும், சில சமயம் சிந்திக்க வைக்கவும் பதிவுகள் பதிந்து கொண்டே இருப்பான். ஒரு நாள் இது போதும் என்று நினைத்தால், மூன்று வலைத்தள கணக்குகளை மூடினால், இந்த உலகில் இருந்தே மறைந்துவிடுவான்.

சில சமயம் எதாவது புதிதாக முயற்சி செய்வான், இப்போ கூட பாருங்க... முதல் கட்டுரை எழுதி பழகுறான் ...