Monday, September 5, 2011

ஆதலினால் காதல் ஆய்வோம்


மனிதர்களைத் தவிர வேறு எந்த மிருக இனமும் காதலைப் பற்றி இவ்வளவு யோசித்து இருக்காது, கட்டாயமாக வேறெந்த இனத்தின் ஒவ்வொரு தனி மிருகமும் காதலைப் பற்றி தனிக் கருத்து வைத்திருக்காது. யோசிப்பதொடு நிற்காமால் கவிதை, கதை, ஓவியம், சிலை ... இன்னும் எத்தனையோ காதலால் மனிதன் படைத்துள்ளான். இதைப் பற்றி கொஞ்சம் யோசிப்போம். (தப்பில்லை, நாமும் மனிதர்கள் தானே ?)

யாரையும் குறிப்பிடாமல் இருக்க, நம் மரபுப்படி தலைவன், தலைவி என்றே ஆண், பெண்ணை அழைப்போம். இங்கு சொல்வதெல்லாம் ஒரே ஒரு தலைவன், தலைவி பற்றி மட்டுமல்ல. பல தலைவன் தலைவிகளின் வாழ்க்கையில் நடந்தவை, நடப்பவை. (தல, தலவலி என்று குறிப்பிட்டிருந்தால் சில மணமான தலைவர்கள் சிறிது மகிழ்ந்திருப்பார்கள்)

காதல் வருமுன் 
தலைவன் எழுந்து இரண்டு மணிநேரம் ஆகியும், ஏன் இன்னமும் அழைப்பு வரவில்லை என்று தெரியவில்லை. அதனால் வேறு ஒன்றும் செய்யாமல் காத்திருக்கிறான் தலைவன். இந்த தாமதத்தால் பிரச்னை ஒன்றும் இல்லை என்றாலும் அடுத்த வீட்டுத் தலைவனுக்கு எழுந்து பல்துலக்குமுன் வருகிறதாம், தனக்கு மட்டும் ஏன் வரவில்லை என்றொரு ஏக்கம்... இரண்டு காப்பி குடித்தாயிற்று, நடந்துபோய் புகையும் போட்டாச்சு ...

தலைவன் ஒரு இளைஞன். ஒவ்வொரு நண்பனும் நாலைந்து காதல் கதை சொல்கிறான். இவனும் பார்த்தது, பேசியதுக்கெல்லாம் கண்காது வைத்து சொல்லிப் பார்த்தாலும், திருப்தி வரமாட்டேங்குது. காதலைத் தேடி அலைகிறான், நேரிலும் வலைத்தளத்திலும். காதலுக்கு இரண்டுபேர் தேவை என்பதைக் கூட கண்டுகொள்ளாமல் தனியாகவே காதலிக்கிறான், அதில் தோல்வியும் அடைகிறான். காதல் அமையாததால் வாழ்க்கையில் இவனுக்கொன்றும் பிரச்னை இல்லை, என்றாலும் தனக்கு மட்டும் ஏன் இல்லை என்றொரு ஏக்கம்... (இதெல்லாம் தலைவிகளுக்கும் பொருந்தும், அப்படியே பால் மாற்றி படியுங்கள்). இல்லாத காதலுக்குக் கவிதை கூட எழுதுறான், அது தோற்றதாக கற்பனை செய்து காதல்தொல்வி கவிதை அதிகம் எழுதுறான், பெண்ணை நம்பாதே என்று ஞானக் கவிதையும் எழுதுறான்.

என்னவென்று தெரியாத போதே, ஆராய்ச்சி செய்ததாக நினைத்து ஒரு முடிவுக்கும் வருவதாகட்டும், இந்த விசயத்தில் தன் கருத்தே சரி என்று நினைப்பதில் ஆகட்டும், இருக்கு இல்லை, உண்மை பொய் என்று எதேனும் ஒரு பக்கம் சாய்ந்து சண்டை போடுவதில் ஆகட்டும் ... காதல் கடவுள் போலத் தான்.

காதல் வந்தபின் 
தலைவன் மதுக் கூடத்தில் நண்பர்களுடன் இருக்கிறான். அவர்கள் அனைவருக்கும் புதுப்பழக்கம், இருந்தாலும் ஒவ்வொருத்தனும் தான் தான் அதிகம் அனுபவிப்பதாக காட்டிக் கொள்வதில் பேரார்வம். சரக்கு பற்றிய அறிவை (?) கொட்டித் தீர்க்கிறார்கள் ... தன் சரக்கே சிறந்ததென்றும்... பல சரக்கு கலப்பதே சிறந்ததென்றும்... எதைக் கலந்தால் தலைவலி வராது என்றும்... சரக்கடிக்கும் முன்னும் பின்னும் செய்யவேண்டியவை பற்றியும் ... ஒரே சத்தம், மற்றவர் சொன்னது ஒருவருக்கும் புரியவில்லை.

காதலில் இருக்கும் இரண்டு தலைவர்கள் ஒரே மாதிரி பேசுவதில்லை. அவனுக்கு அவன் காதல் மட்டும் தெய்வீகமானது, மற்றவர் காதல் என்றால் ... சிலது இனக்கவர்ச்சி, சிலது காமம், சிலது மயக்கம், தன் உறவுக்காரத் தலைவியைக் காதலிப்பவர் கட்டாயமாக காமக்கொடூரன் தான். காதலில் இருப்பவர்கள் பெரிய போதையில் இருப்பவர் போலத் தான் இருப்பார்கள், (சத்யராஜ் பட வசனம் போல - அப்படியில்லாட்டி இந்தக் கருமத்தை எதுக்கு குடிக்கணும்?) பேசுவார்கள். காதல் ஆழமானால் மற்றவற்றை தியாகம் செய்வார்கள். அருகில் இருக்கும்போது காமம் வரும், விலகி இருக்கும் போது வேறு குணங்களை மனம் போற்றும், குறை எப்போதும் தெரியாது. 

தன் குறைகள் தெரியாமல் மறைவதாகட்டும், பிறர் குறைகளைக் கண்டு கோபம் வருவதிலாகட்டும், மற்றவருக்கெல்லாம் இங்கிதம் தெரியவில்லை என்பதிலாகட்டும், மற்றவரெல்லாம் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது என்பதிலாகட்டும் ... காதலிப்பது வாகனம் ஓட்டுவது போலத்தான்.

காதல் வாழ்க்கை 
தலைவன் மதுக்கூடத்தில் தனியாக இருக்கிறான். முன்பு போல ஆரவாரம் இல்லை, அமைதியாக குடிக்கிறான். இப்போதெல்லாம் போதை கண்ணை மறைப்பதில்லை, நிதானமாக இருப்பது போலவும் இருக்கு இல்லாதது போலவும் இருக்கு. குடித்தாலும் குடிக்காவிட்டாலும் ஏனோ லேசான எரிச்சல் நிரந்தரமாக இருக்கத் தான் செய்யுது. போதையில்லாமல் வாழமுடியாது போல இருக்கு.

தலைவனும் தலைவியும் தாங்கள் இணைந்ததை உலகிற்கு அறிவித்துவிட்டனர், சிறிய விருந்தோடு. வழியில் பல எதிர்ப்புகள், தடைகள், புண்கள், வலிகள். சில புண்கள் தழும்பு விட்டே ஆறிப்போகின்றன, தோல் முன்புபோலவே இல்லை. தலைவன் வரும்போது தலைவி குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கிறாள், தலைவி வரும்போது தலைவன் காலைக்குள் முடிக்கவேண்டிய காரியத்தில் மூழ்கியுள்ளான். நேரமில்லாமை மட்டுமல்ல வேறுபல பிரச்னைகளையும் ஒன்றாக சமாளிக்கவேண்டியுள்ளது. முன்பு போல இணைந்திருந்தால் உலகம் மறைந்துபோவதில்லை, கூடவே இருந்து கொண்டு தானிருக்கிறது. முன்பு தெரியாத குறைகள் தெரிந்தாலும், உண்மைக் காதலானதால் பிரிய மனமில்லை.

வீரியம் குறைந்தாலும் வெறுக்க முடியாததிலாகட்டும், குறைகள் இருந்தாலும் பிரிய முடியாததிலாகட்டும், பிரிய வேண்டி வந்தாலும் பிரிய மனமில்லாது போவதிலாகட்டும் ... காதலும் நம் தேகம் போலத் தான்.

காதலின் முடிவு 
அவன் இப்போதெல்லாம் குடிப்பதையே மறந்து வாழ்கிறான். மகிழ்ச்சி போதையால் வரவில்லை, மகிழ்ச்சி போதையை மேம்படுத்தியதை உணர்ந்தான், மகிழ்ச்சிக்கு போதை தேவையில்லை என்று அறிந்துகொண்டான். ஆனால் எதையும் அவன் மறக்கவில்லை, மனதுக்குப் பிடித்த நண்பர் வந்தால் பழங்கதை சொல்கிறான்.

தலைவனும் தலைவியும் பேசிக்கொள்வது கூட அரிதாகிவிட்டது இப்போதெல்லாம். சில சமயம் ஒருவரை பிரிந்து மற்றவர் ஒருவாரம் கூட ஏதோ மருத்துவமனையில் கழித்துள்ளார்கள் ... பேரன்களுக்கு வசதிப்படும்போது கூட்டிச் சென்று காட்டுகிறார்கள், மற்ற நேரமெல்லாம் நினைவுகளோடும், வேண்டுதல்களோடும் தனிமையில் காலம் கழிகிறது. இந்த முறை அதிக மோசம்போல உள்ளது, அனைவரும் மிகவும் பரபரப்பாக இருக்கிறார்கள். நிறுத்திக் கேட்டாலும் பதில் சொல்லாது பரிதாபமாக பார்க்கிறார்கள்... படுக்கவைத்தே அழைத்து வந்தார்கள் வீட்டிற்கு ... கடைசி நிமிடம் உடனிருந்து பார்க்க முடிந்தாலும் ...

நம்மிடம் கேட்டு வராததிலாகட்டும், நம்மைக் கேட்டு முடியாததிலாகட்டும், ஆரம்பித்தால் முடிவு வரை இருப்பது தான் தர்மம் என்பதிலாகட்டும் ... காதல் நம் வாழ்க்கை போலத்தான்.

1 comment:

  1. https://www.facebook.com/note.php?note_id=244821435562106

    ReplyDelete