சுயம்பு சித்தன் என்பவன் எவனா இருந்தா எனக்கென்ன, ஏதோ பதிவுகள் வெளியிடுகிறான், பிடித்தால் படிக்கிறேன், அவ்வளவு தான், அவனைப் பற்றி தெரிந்து என்ன செய்யப் போறேன் என்றிருப்பவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்.
சுயம்பு சித்தனின் சமுதாய பிரக்ஞை
அப்படி எதுவும் அவனுக்கு கிடையாது. இதுவரை இரண்டே இரண்டு பிரச்னைகளுக்குத் தான் அவன் பதிவுகள் வெளியிட்டிருக்கான் - இந்தியாவிற்குக் கறுப்புக்கொடி மற்றும் தீயில் கருகிய செங்கொடி. வேறு எதுவும் அவனை பாதித்ததாக தெரியவில்லை. அடுத்து எப்போ அவனுக்கு சமுதாய உணர்வு வரும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
கறுப்பு
அவன் ஒரு சிறுவிவசாய கூட்டுக்குடும்பத்தை சேர்ந்தவன். நன்றாக பேசும் மனைவி பலமுறை சொல்லியும் பிரிந்து போகாதவன். சொத்து பிரித்துப் போனால் வாழலாம். கடனை பிரித்துப் போய் அழிவதற்கு பதில், ஒன்றாய் சேர்ந்து உழைத்து வாழ விரும்புபவன். பங்காளிகளுக்குள் பல ஆயிரம் இருக்கும்னு போறவன்.
சிவப்பு
அவன் சாவை அருகிலிருந்து பார்த்திருக்கான். ஐந்து மணி நேரம் ஆகியும், இறக்கும் முன் வாழும் ஆசையோடும், ஏக்கத்தோடும் பார்த்த தாத்தாவின் கண்களை மறக்க முயன்றுகொண்டிருந்தான். அந்தப் பிணத்திற்கு ஆடை அணிவித்தவன்.தோழிகளின் ஒப்பாரியின் பின்னணியோடு அவன் ஆயா விடாது அழுதுகொண்டிருந்தாள். எல்லாக் கிழவிகளும் ஒரே குரலில் "உணர்ச்சியில்லா சடமே! புருஷன் செத்த அழுகிறவளுக்கு காப்பித் தண்ணியும், ரொட்டியும் தரியே, உனக்கு சாவு வீடுன்னா என்னன்னு தெரியுமா?" என்று திட்டினாலும் கவலைப்படாது, "ஒரு சாவு இந்த வீட்டிற்கு போதாதா?" என்று திருப்பி சத்தம் போட்டு, ஆயாவிற்கு ஊட்டி அவள் சர்க்கரை அளவு குறையாமல் காப்பாற்றிய திருப்தியோடு, கல்நெஞ்சக்காரன் போல முகம்காட்டி சென்றவன்.
முகநூலில் சுயம்பு சித்தன்
அவன் +2 தமிழில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவன், கல்லூரித் தமிழ் படித்ததில்லை. தமிழ், ஆன்மிக அறிவை வளர்க்கவிரும்பி, முகநூலில் தமிழ் படைப்பாளி போலவோ, ஆன்மிகவாதி போலவோ தோன்றிய அனைவரையும் நண்பராக்க விழைந்தான், அதில் சிலர் அந்த விழைவை ஏற்றார்கள். நிறைய படிக்கிறான், சிலரிடம் ஆன்மிகம் விவாதிக்கிறான், படித்த/பார்த்த நல்லவற்றை பகிர்வான், சொந்தமாகவும் எழுதுவான்.
முகநூலில் சுயம்பு சித்தனின் நண்பர்கள்
அவன் முகநூல் நண்பர்கள் யாரிடமும் தன் சுய விவரங்கள் சொன்னதில்லை. அவனுக்குத் தெரியும், ஏதோ ஒரு பெயரும், புகைப்படமும் காட்டினாலும் யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று.
ஆனாலும், அவர்களிடம் அவன் எந்தப் பொய்யும் சொன்னதில்லை. இந்தப் பெயரும் புனைப்பெயர் என்பதை மறைக்காம சொல்லியிருக்கான். தன் புகைப்படமும் யாருக்கும் காட்டினதில்லை. புதிததாக நண்பர்கள் சேருகிறார்கள், சமுதாயக் கருத்தோ விமரிசனமோ எதிர்பார்த்து வந்திருந்தால் ஏமாற்றம் அடையலாம், அவனிடம் சமுதாய உணர்வு குறைவு.
அவன் சொன்ன சில கருத்துகளுக்கு கொஞ்சம் எதிர்ப்பும் வந்தது. ஆபாசமாக பேசியவர்களை தடை (block) செய்துவிட்டான். எதிர்ப்பில் மிக வேடிக்கையானது, பிரபலம் ஒருவர் கிசுகிசு எழுதுவது போல அவனை தாக்குறார் ...(அண்ணா, அவன் டாவு விட்டு சுத்துரானுங்க, உங்கள மாதிரி பத்து அம்பது பேர் பேசுனா ரொம்ப ஆடுவானுங்க)
யார் அவன்
அந்த அடுமனை (bakery) அருகில் கத்திரி புகை விட்டு, அங்கே இருக்கும் தினத்தந்தி படிக்கிறவன்...
திருவண்ணாமலையில் கறுப்பும், வெளுப்புமா தாடியோட நடக்கிறவன்...
அரைக்கை சட்டைப்பையில் பேனா சொருகி பேருந்துக்குக் காத்து நிற்பவன் ...
இன்னமும் சொல்லிகிட்டே போகலாம், இவங்களைப் போலத் தான் அவனும், பத்து முறை பார்த்தாலும் முகம் மனதில் பதியாது, முதல்முறையே எங்கோ பார்த்த மாதிரியும் இருக்கும், ஒரு சாதாரணமானவன். இவங்களை மாதிரியே வேடிக்கை அதிகம் பார்ப்பான். இவங்களை மாதிரியே எல்லாத்தையும் கவனிச்சு மனசுக்குள்ளே ஆய்வு செய்து, உணர்ச்சி காட்டாது பார்க்கும் முகம் அவனுக்கும். இவங்களை மாதிரியே எப்போவாவது ஒரு சொல் சொல்லுவான். அவ்வளவு தான், இவர்களில் எவனையாவது, எப்பொழுதாவது நீங்கள் கவனிக்க நேர்ந்தால், அவனை மாதிரி ஒருவன், விதிவசத்தால் கணினி உபோயோகித்து முகநூலில் பொழுதுபோக்கும் பதிவுகள் இடுகிறான் என்ற தோன்றினால், அவன் தான் இவன் அடையாளம்.
இந்த மாயா உலகில், நானே உருவாக்கிகிட்ட சின்ன மாயை தான் இந்த சுயம்பு சித்தன். அவன் இங்கே தமிழ் கற்று, எழுத பழகுகிறான். அனாவசிய அறிவுரை சொல்ல மாட்டான், முகநூல் நண்பர்களுக்கு நல்லது, கெட்டது செய்ய மாட்டான். நாளைக்கு பல பேர் போல புலம்பல் இலக்கியம் பழகலாம் என்று தோன்றினால், புலம்பு பித்தன் என்று பேர் மாற்றிக் கொண்டு புலம்புவான். அவனைப் பற்றி இதுக்கு மேல எதுவும் யோசிக்காமல், அவன் பதிவுகளை படிக்க முடிந்தால் படியுங்கள். இல்லை விட்டுவிடுங்கள். பிடித்தால் விருப்பம் (Like) தெரிவியுங்கள், கருத்தும் சொல்லுங்கள். நீங்கள் அவனை நண்பன் இல்லை என்று முகநூலில் குறிக்கும் வரை, உங்களை நல்ல நண்பராக மதித்து, உங்கள் பொழுது போகவும், சில சமயம் சிந்திக்க வைக்கவும் பதிவுகள் பதிந்து கொண்டே இருப்பான். ஒரு நாள் இது போதும் என்று நினைத்தால், மூன்று வலைத்தள கணக்குகளை மூடினால், இந்த உலகில் இருந்தே மறைந்துவிடுவான்.
சில சமயம் எதாவது புதிதாக முயற்சி செய்வான், இப்போ கூட பாருங்க... முதல் கட்டுரை எழுதி பழகுறான் ...
https://www.facebook.com/note.php?note_id=243297712381145
ReplyDelete