Tuesday, September 13, 2011

முகநூலில் சென்ற வாரக்கடைசி


முகநூலில் என் வாரக்கடைசி கழிந்ததைப் பற்றி. என்னமோ மூணாறில் கழித்தது போல இதற்கெல்லாம் குறிப்பும் கட்டுரையும் தேவையா என்று நினைப்பீர்கள். மூணாறுக்கும் பிற தென்னிந்திய மலைமீதிருக்கும் சுற்றுலாத்தலங்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறதா, மனிதன் செய்திருக்கும் சில வித்தியாசங்கள் தவிர ? குட்டையாகவே வைக்கப்படும் தேயிலைத் தோட்டங்களை ஏனோ என்னால் இயற்கை என்று ரசிக்கமுடிவதில்லை, பசுமை என்று வேண்டுமானால் சொல்லலாம். முகநூலில் கிடைக்கும் அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒருவிதம்.

இதில் "அவர்" என்ற வார்த்தை ஒவ்வொரு முறை உபயோகிக்கப்படும்போதும் வெவ்வேறு அவன், அவளை குறிப்பிடும். அது நீங்கள் சந்தித்த ஒருவரை நினைவூட்டினால், அது உண்மையாக இருக்கலாம், ஆனால் அது அவராக இல்லாமலிருக்கவே அதிக வாய்ப்புள்ளது. அதே போல "அந்தக்குழு" என்பதும்.

வாரக்கடைசி ஆரம்பம்
வெள்ளிக் கிழமை மாலை வீடு திரும்பியதும் ஒரு பரபரப்பு, சிலவருடங்கள் கழித்து ஒரு நல்ல நண்பனுடன் காலம் கழிக்க செல்வது போல. இத்தனைக்கும் மதியம் தான் மின்னஞ்சல்கள் பார்த்து முகநூல் உலகில் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை என்பதை அறிந்திருந்தேன். 

என்ன இருந்தாலும் இந்த விண்டோஸ் ரொம்ப மெதுவாத் தான் ஆரம்பிக்குது...

ஒருவழியாக முகநூல் முகப்பு பக்கத்தை பார்த்தாச்சு :). 267 மிக சமீபத்தியது என்று காட்டுது, எல்லோரும் சுறுசுறுப்பா ஏதோ சொல்லிகிட்டே இருக்காங்க. 2 அஞ்சல்கள், என் பதிவுகள், பின்னூட்டங்கள் சார்ந்த 12 நிகழ்வுகள், ஒரு புதிய நண்பர் விழைவு. புதிய நண்பரில் ஆரம்பிக்கிறேன்.

"அப்பா எனக்கு இந்திய வரைபடமும், கறுப்பு மைப் பேனாவும் வாங்கணும்" ...
"சரி வாங்கலாம்" ...
(இந்திய வரைபடமும் கறுப்பு மையும் கேட்கும் மகன் ... நேற்றைய துக்க சம்பவத்தாலா ?) என்று ஒரு நிலைப் பதிவு வெளியிட்டால் நண்பர்களுக்கு பிடிக்குமா? வாக்கியம் இன்னும் கொஞ்ச நல்லா வரணுமோ? முதலில் இந்த புதிய நண்பரில் ஆரம்பிப்போம், அப்புறம் இதை யோசிப்போம்.

புதிய நண்பரின் சுயவிவரத்தையும், சுவரையும் பார்த்தால் ஆபாசமான படங்களோ, பதிவுகளோ இல்லை, ஏற்கத்தக்க அளவிற்கு நல்லவராகத் தான் தெரிகிறார், நட்பை ஏற்கிறேன். என் பதிவிற்கு நான்கு பேர் விருப்பு (Like) தெரிவித்துள்ளார்கள் (லைக்குக்கு லைக் போட முடிந்தாலும் நல்லாத் தான் இருக்கும்... நன்றியுணர்வு! ), கொஞ்ச நேரம் முன் இருந்த அலுப்பு சுத்தமா காணாமல் போய்விட்டது. என் பின்னூட்டங்களுக்கு வந்த பின்னூட்டங்களுக்கு என் புதிய பின்னூட்டங்கள் ...

"ஏங்க இன்னைக்கு வெளியில் போய் சாப்பிடலாமா?"
"சரி சாப்பிடலாம்"
(ஹோட்டலில் ஒழுங்காவா சமைக்கிறான்னு கேட்டாலும் இந்த பெண்களுக்கு அங்கு செல்லும் விருப்பம் ஏனோ குறைவதில்லை) இந்த நிலைப்பதிவு பற்றியும் அப்புறம் யோசிப்போம்.

மிக சமீபத்தியது பார்க்கிறேன் ... ஒரு விசயத்தை எத்தனை விதமாக பார்க்கிறார்கள், சிந்திக்கிறார்கள் ... ஒரு பெரிய கூட்டம் ஒரு விசயத்திற்கு உயிரைக் கொடுத்து பத்திபத்தியாக வாதிடும்போது, இன்னொரு கூட்டம் உயிர்போகும் விசயத்தை சந்தோசமாக ஒற்றை வரிகளில் பேசுகிறார்கள். உண்மையிலேயே இப்படி எல்லாம் யோசிப்பாங்களா இல்லை சுவாரசியமான பதிவிட இப்படி யோசிப்பாங்களா?  இதோ சில கவிதைகள் ...

"ஏங்க கிளம்பலாமா?"
"இதோ பத்து நிமிசம் "

அவர் ஒரு பெண்கவிஞர், நிறைய கவிதைகள் எழுதுவார், சில காதல் கவிதைகள், மற்ற பல பெண்கவிஞர்கள் போலவே அம்மா பற்றியும், நட்பு பற்றியும் நிறைய கவிதைகள். சில சமயம் இந்த இரண்டிற்காக தன் வாழ்வையே தியாகம் செய்து விட்டாரோ என்று தோன்றும் ... அப்படியெல்லாம் இருக்காது, ஒரு பெண் இதைப் பற்றி எழுதினால் தான் நல்ல பெயரோடு இருக்க முடியும் போல ...

அவர் ஒரு ஆண்கவிஞர், எப்போதும் காதல்தோல்வி கவிதைகளும், ஏமாற்றும் பெண்கள் பற்றிய கவிதைகளும்தான் எழுதுவார். நான் ஆயிரம் ரூபாய் பந்தயம் வைக்கிறேன், அவர் இதுவரை ஒரு பெண்ணுடனும் பழகியிருக்கவே மாட்டாரென்று, அப்புறம் எங்கே காதல், தோல்வி எல்லாம்.

படங்களுடன் இணைந்த கவிதைகளும் இருக்கு, சிலது கண்ணையும் கருத்தையும் சேர்த்து கவருது.

"சாப்பிட வாங்க"
"வெளியிலே போலாம்னு சொன்னே?"
"பத்தரை மணிக்கு எங்க போக? அதான் அவல் தாளிச்சுட்டேன்"
"அப்படியே ஒரு கப்பில் ஸ்பூன் போட்டு இங்கயே குடுத்துடு"

அந்தக் குழுவில் எதோ காரசாரமான விவாதம். நினைத்த மாதிரியே அவர் தான் அதை ஆரம்பித்துள்ளார். அவர் வீட்டு தண்ணீர் குழாயில் காத்து வந்தாலும், அவருக்கு வாயுக் கோளாறு வந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் இந்திய ஏகாதிபத்தியமும், மேட்டுக்குடி மக்களும்தான் காரணம் என்று தினமும் திட்டி எதாவது பதிவு போடுவார், இப்படியும் அப்படியுமா ரெண்டுமூணு பேர்... ஒரே கருத்து மழை... நானும் கலந்துகிட்டு நாட்டைக் காப்பாற்ற ஆரம்பித்தேன்...

"நான் போய் படுக்கப் போறேன், நீங்க ?"
"இதோ பத்து நிமிசம் ... அந்த படம் முடிஞ்சிடுச்சா?"
"ஒரு மணி ஆகப்போது ... இந்த அவல் பாதி காஞ்சி போச்சு, இதை கூட திங்க நேரம் இல்லாம எவகூட இந்நேரத்துக்கு பேச்சு?"
"அதெல்லாம் இல்லை ... இதில கொஞ்சம் ரசம் ஊத்தினா சரியாகுமா?"
"!@$#%%^"
"சரி சரி நான் இதை சாப்பிட்டுட்டு கொண்டு போய் கழுவபோடுறேன், நீ போய் படு, நான் அரை மணியில் வருவேன்"

இந்த குழுக்களில் நடக்கும் விவாதங்கள் சுவாரசியமானவை, அவரவருக்கு பொழுதுபோகாத நேரங்களிலும், ஒரு மாற்றம் (break) தேவைப் படும்போதும் வந்து ஒரு பெரிய பிரச்னை பற்றி தீவிரமான கருத்துகள் சொல்லி சண்டையிட்டு, வேறு உருப்படியான வேலை வந்ததும் விட்டுவிட்டு சென்றுவிடுவோம். இப்படி சண்டை போட என்றே சில பிரச்னைகளும், அதன் இரண்டு பக்கங்களுக்கும் ஆட்களும் எப்போதும் உண்டு ... ஆத்திக மதம் x நாத்திக மதம் ;  இந்திய தமிழர்கள் X இந்தியவாழ் உடோபிய தமிழர்கள்; தற்கொலை X தீக்குளிப்பு; தூக்குதண்டனை வேண்டும் X எங்க கூட்டத்துக்கு மட்டும் வேண்டாம் ... அதுக்கான சரியான குழுவில் போய் ஒரு வரி பதிவு போட்டால்போதும் நாலு மணி நேரம் கூட நீங்க விவாதம் செய்யலாம்.

அரட்டையில் (chat), வணக்கம் சொல்கிறார் நண்பர். அவர் நீண்ட நாள் நட்பு, ஆன்மிகம் பற்றி நிறைய பேசுவோம், இன்று மனிதன் கடவுள் மேல் கொள்ளும் காதலையும், எதிர்பால் மேல் கொள்ளும் காதலையும் ஒப்பிட்டு பேச ஆரம்பித்தோம்.
(ஆண்மையை காட்டவும், ஆன்மீகங்காட்டவும் காதல் தேவை ) இந்தக் கேவலமான நிலைப்பதிவை போட்டால் ரொம்ப திட்டு வாங்க வேண்டி வரும்.

"இன்னும் அங்க இருந்து எழலையா ?"
"உனக்கு தூக்கம் வரலையா?"
"ஒரு தூக்கம் போட்டு எழுந்தாச்சு, தண்ணி குடிக்க வந்தேன் "
"அதுக்குள்ளே ஒரு தூக்கமா?"
"நாலரை மணி ஆச்சு, நாளைக்கும் எங்கேயும் போகப் போறதில்லை, முழுநாளும் தூங்கப் போறீங்க"
"இதோ பத்து நிமிசம் ... நீ போய் படு வந்துருவேன் "

இடுப்பு கொஞ்சம் வலிப்பது போல இருக்கு, கொஞ்சம் நடந்து போய்வரலாம், இந்நேரம் டீக்கடை திறந்திருக்கும். கடையில் நிற்கும்போது தூக்கம் தள்ளுது ... திரும்ப வரும்போது ... காதல் பற்றி ஒரு கட்டுரை எழுதினால் என்ன? ... சில வரிகளும் வந்து விழ ... தூக்கம் காணாமல் போனது.

கட்டுரை நல்லாத்தான் வருது ...

"தூங்கவே இல்லையா?"
"படுத்துப் பாத்தேன், தூக்கம் வரல, பசி போல, டிபன் சாப்பிட்டுட்டு படுக்கலாம்னு... எனக்கும் காப்பி போடு "

ஒருவழியாக கட்டுரை முடித்து வெளியிடுவதற்குள் மதியம் இரண்டாகி, மதிய உணவும் முடித்து விட்டு படுக்க போகுமுன் ...

"திரும்ப அங்க எங்க போறீங்க "
"இரு புது கட்டுரைக்கு எத்தனை பேர் பதில் போட்டிருக்காங்கன்னு பாத்துட்டு போய் படுக்கிறேன்"
"பத்து நிமிசம் தாண்டினா நான் சுவிட்சை நிறுத்திடுவேன் "
"சரி"

மூன்று மணிக்கு கணினியை நிறுத்திவிட்டு படுக்கப் போனேன்.

"ஆறு மணி ஆச்சு, விளக்கு வைக்கிற நேரம், எழுங்க, இன்னைக்கு சீக்கிரம் சாப்பிட்டுட்டு எட்டு மணிக்கே படுத்துடுங்க "
"சரி"

அந்தக் கட்டுரைக்கான பின்னூட்டத்தில் ஒருவர் கேள்வி கேட்டிருக்கார், பதில் சொல்லிவிட்டு, பின்னூட்டங்களுக்கு விருப்பு தெரிவித்துவிட்டு முகப்பு பக்கம் வந்தால் மிக சமீபத்தியது நிறைய இருக்கு ... படித்து ... பார்த்து ... பிடித்ததற்கு விருப்பு, சிலதுக்கு கருத்து ...

"இப்போ சாப்பிட வரப்போறீங்களா இல்லையா? நீங்க வரவரைக்கும் நாங்க சாப்பிடப்போறதில்லை, பத்து மணியாகுது "
(நான் சாப்பிட வரும்வரை மற்றவர் உண்ணாவிரதம் - குடும்பப் பாசம் !!! ) குடும்பத்தில் சண்டை வருவதற்குள் சாப்பிட போறேன், அப்புறம் வந்து இந்த நிலைப்பதிவைப் பற்றி யோசிப்போம் ...

சாப்பாடு முடிந்து முகநூல் வருவதற்குள் அந்த நிலைபதிவு மறந்து போச்சு. இப்ப கொஞ்ச நாளா இப்படித்தாங்க ஒவ்வொரு விசயமும் ஒரு நிலைப்பதிவா தெரியுது, அப்புறம் மறந்து போகுது ... மனநிலையை சோதிக்கணும் ...

"எனக்கு தூக்கம் வருது, எழுங்க "
"இதோ பத்து நிமிசம் ... நீ போய் படு வந்துருவேன் "
"இந்தக் கதையெல்லாம் ஆகாது, அதுவரைக்கும் நானும் இங்கேயே இருக்கேன்"
"ஒரு மணிக்கெல்லாம் எனக்கு தூக்கம் வராதே ... சரி இன்னைக்கு இது போதும்..."

தூங்கவே முடியவில்லை. கொஞ்சநஞ்ச விவாதங்களா? எல்லாம் மண்டைக்குள் ஓடுது... இதை அப்படி சொல்லிருக்கலாமோ ?

"இன்னும் எதோ யோசிச்சிட்டே இருக்கீங்க, தூங்கலையா?"
(மனைவிக்கு மட்டும் - தூரத்திலிருந்து நினைத்தாலும் தெரிகிறது; அருகிலிருந்து வேறு எதையாவது யோசித்தாலும் தெரிகிறது ... எப்படி?) 

ஞாயிற்றுக்கிழமை எழும்போது பதினொரு மணி ... தூங்கின மாதிரியே இல்லை ... முகநூல் பக்கங்கள் திரும்பித் திரும்பி வருது... வடிவேலு, கவுண்டமணி முகங்கள், தினமலர், தூக்குக்கயிறு இதெல்லாம் கனவில் வந்தா, அது ஒரு தூக்கமா? ... இதைத் தானே நாள் முழுசும் பார்க்கிறோம் ...

நேராக வந்து கட்டுரைக்கு எத்தனை விருப்பும், கருத்துகளும் என்று பார்க்க ஆரம்பித்தேன் ...

"இந்தக் காப்பியை குடிச்சிட்டு கிளம்ப ஆரம்பிங்க. இன்னைக்கு சமையல் இல்ல. நீங்க தூங்கும்போதே சாண்ட்விச் செய்து நாங்க சாப்பிட்டாச்சு, நேரா ஹோட்டல் போய் சாப்பிடுவோம், வர்ற வழியில மேப்பும், பேனாவும் வாங்கணும் "
(இன்னொரு உயிரைத் தன்னுடன் சேர்த்தான் என்றும் தொல்லையடா
இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா)

அவருடைய தாத்தா கோவையிலிருந்து அந்த கிழக்குப் பக்க தீவு நாட்டிற்கு சென்றவராம், அதன்பின் விடுமுறைக்கு தான் இங்கு வருவார்களாம், அரட்டையில் ஹாய் சொன்னார் ... மாலை நேர தேநீரோடு ...அவருக்கு ஏனோ என்மேல் நல்ல அபிப்ராயம், எனக்கு தூய அன்பு உள்ளம், நேர்மையானவன் என்றெல்லாம் சொல்கிறார் ... 

"மணி ரெண்டு ஆகுது, இந்த பொம்பளை கூட அரட்டை அடிக்கத் தான் இங்கேயே தவம் இருக்கீங்களா?" 

அப்படி இல்லை என்று நிரூபிக்க அரட்டை சரித்திரம் முழுதும் காட்டி ... 

"அப்புறம் எதுக்கு அவ உங்கள நல்லவன்னு சொன்னா?"
(நல்லா பழகினாலும் பழகாட்டியும் பெண்களை புரிந்து கொள்ள முடியாது என்பது புரிவதற்குள் நமக்கு வயதாகிவிடுகிறது)

நேரில் பேசிப் பழகினாலே கண்டு பிடிக்க முடியாதவற்றை, நாம் யோசித்து திருத்தி எழுதுவதிலிருந்து சில பெண்கள் கண்டுபிடித்துவிட்டதாக சொல்கிறார்கள் ... ஏமாறுகிறார்களா இல்லை ஏமாற்றுகிறார்களா என்றே தெரிவதில்லை ... எழுதினதைப் படித்துவிட்டு, இவ்வளவு வரிகள் எழுதுறே ஒற்றெழுத்து எங்கே போடணும்னு தெரியல என்று சொன்னால் நம்பும் படி இருக்கும், சும்மா இதெல்லாம் சொன்னால் சந்தேகம் வராதா?

எல்லோரும் கிளம்பி சாப்பிட்டு, கடைவீதியில் பேனாவும் வரைபடமும் வாங்கி ...

"சாயந்திரம் ஆகப்போது அப்படியே பீச் போயிட்டு கோவில் போலாமா?"
"எனக்கு வயிறு ஒரு மாதிரி இருக்கு, வீட்டுக்கு போவோம்"

அப்படி இப்படி சமாளித்து திரும்ப இங்கு வருவதற்குள் மூன்று மணிநேரம் வீண் ...

அப்புறம் இரவு உணவிற்காக எழுந்தேன் ... இரண்டு மணிக்கு படுக்கப் போக எழுந்தேன்.
காலையில் ஆறுமணிக்கு எழுந்தால் ... ஒரே தலைவலி, உடல்வலி, அலுப்பு ... விடுப்பெடுக்கணும் போல இருக்கு ... அடுத்த தலைப்பு போடவேண்டிய கட்டம் தாண்டிவிட்டது ...

வார ஆரம்பம் 
(வாரக் கடைசி முடிந்ததே தெரியவில்லை ... அதற்குள் வாரம் ஆரம்பித்துவிட்டதா?)

பார்த்த முதல் நண்பன் கேட்ட முதல் கேள்வி, அப்புறம் பார்த்த எல்லோரும் கேட்ட ஒரே கேள்வி - 
கண்ணு இப்படி சிவந்து பொங்கி இருக்கு, வெள்ளி முதல் ஒரே போதையா ?

போதை தான் போல ... நிம்மதியா தூங்க இடம் கிடைத்தால் போதும் போல இருக்கு ... 

(முகநூல் ஒரு போதை ... உங்கள் குடியையும், உடலையும், மனதையும் கெடுக்கும் )
இதுக்கு கட்டாயம் லைக் போடுவாங்க ... எல்லோரும் நம்மைப் போல போதையில தானே இருக்காங்க 

1 comment:

  1. https://www.facebook.com/note.php?note_id=248355128542070

    ReplyDelete