வளைபட் டகைம்மா தொடுமக் களெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுசூ ருரமுங் கிரியும்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே
வளையல் அணிந்த கைகளையுடைய மனைவியும், மக்களும்
என்னைக்கட்டும் விலங்காகி நான் அழிவது சரியா?
பல உறவினர்களுடன் எழும் சூரனின் அறிவுத்தெளிவையும், மலையான உருவத்தையும்
துளைத்து ஊடுருவும்படி வேலை தொடுப்பவனே (விடுபவனே).
மாது = பெண், இங்கு மக்களோடு சேர்ந்து சொல்வதால் மனைவி என்று ஆகிறது
தளை = விலங்கு
கிளை = சுற்றம், உறவினர்
உரம் = அறிவுத்தெளிவு, மார்பு, உறுதி. சூரன் என்பது ஆணவத்தைக் குறிப்பதால், அறிவுத்தெளிவு என்பது இங்கு அதிகப் பொருத்தமானது.
வளை - தளை பற்றி மேலும் ...
விளக்கம் 1
கைகளில் அணியப்படுவது, நமக்கு அழகு செய்யும் ஆபரணமானால் அது வளை என்று அழைக்கப்படும், நம் சுதந்திரத்தை தடுக்கும் என்றால் அது விலங்கு என்று அழைக்கப்படும். மனைவி மக்கள் என்றாலே அநுபூதிக்கு தடை என்று முடிவு செய்துவிடக்கூடாது. தடை செய்யும் மனைவி, மக்கள் மட்டுமே விலங்கு.
விளக்கம் 2
மனைவி, மக்கள் நேரடியாக அநுபூதிக்கு தடையாவதில்லை, மனைவி மக்கள் மட்டுமே நம் உலகம், வாழ்க்கை எனும் எண்ணமே தடையாகும். அவ்வித எண்ணமே தளை, விலங்கு.
கிளைபட் டெழுசூ ருரமுங் கிரியும் பற்றி மேலும் ...
இங்கு சூரன் என்பது ஆணவத்தைக் குறிப்பதாகும். ஆணவத்தை அழித்தால் தான் அநுபூதி கிடைக்குமாம். வேல் என்பது ஞானத்தைக் குறிப்பது. ஞானத்தால் ஆணவத்தை நேரடியாக நெருங்க முடியாதாம். ஆணவத்தின் பலகிளைகளில் பட்டு துளைத்து, அதன் உரமான அறிவுத்தெளிவில் பட்டு துளைத்து, அதன் மலை போன்ற உருவில் பட்டு துளைத்த பின்னரே ஆணவத்தை துளைக்குமாம். மற்ற அசுர சம்ஹாரங்களுக்கும் கந்தனின் சூரசம்ஹாரத்திற்கும் ஒரு வேறுபாடு உள்ளது... மற்றவற்றில்
அசுரன் இறப்பான், இங்கு ஆணவமாகிய சூரன் அழிவதில்லை, பிளக்கப்பட்டு அதாவது தன்மை மாறி, சம்ஹாரம் செய்பவனின் வாகனமாகவும், அலங்கார வெற்றிக்கொடியாகவும் மாறுகிறான்.

No comments:
Post a Comment