உதியா மரியா வுணரா மறவா
விதிமா லறியா விமலன் புதல்வா
அதிகா வநகா வபயா வமரா
பதிகா வலசூ ரபயங் கரனே
பிறக்காத, இறக்காத (பிறப்பு இறப்பு இல்லாத) நினைக்காத, மறக்காத (நினைவு, மறதி இல்லாத)
பிரம்மனும், விஷ்ணுவும் அறிய முடியாத சிவனின் மகனே
மேலானவனே, பாவபுண்ணியமற்றவனே, பயமற்றவனே,
தேவர்களின் இருப்பிடமான அமராவதியினை காப்பவனே, சூரனுக்கு பயத்தை தருபவனே
விதிமால் - பிரம்மன், திருமால்
அதிகன் - மிகுதியானவன் - மேலானவன்
அனகன் - அகம் அற்றவன் - பாவபுண்ணியமற்றவன்
அபயன் - பயம் அற்றவன்
தேவர்களும், அசுரர்களும் மனிதப்பிறவிகள் போன்ற பிறவிகள் என்று கூறப்பட்டாலும், அவர்களை நம் புலன்களால் அறிய முடியாத தேகம் கொண்ட சக்திகள் என்றும், நம் தேகங்களில் இருந்து கொண்டு நமக்கு நன்மை,தீமை செய்யக்கூடியவர்கள் என்றும் கொள்வோமேயானால், தேவர்கள் அசுரர்கள் பற்றிய நமது பார்வை, நன்மை தரும்வகையில், மாறுவதுடன், அவர்கள் பற்றிய கதைகளுக்கு புதிய அர்த்தமும் கிடைக்கும்.
இவ்வித அர்த்தங்களை நல்ல குருமார் தகுதியுள்ள சீடர்களுக்கு வெளிப்படுத்துவர், அப்படி வெளிப்படுத்துவது வார்த்தைகளும், தர்க்கங்களும் இன்றி நடக்கும்.
அமராவதி மட்டுமல்ல, இமயம், பாவங்களைப் போக்கும் கங்கை போன்றவையும் நம் தேகங்களில் இருப்பவையே. கந்தனும் அப்படியே.

No comments:
Post a Comment