கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்
மெய்வாய் விழிநா சியோடுஞ் செவியாம்
ஐவாய் வழிசெல் லுமவா வினையே
கையில் வாய்த்த ஓளிவிடும் வேல் உடைய முருகனின் திருவடியை (நினைவில்) பெற்று
தெளிந்து, வேண்டியதை அடைந்து, ஈடேறுவாய் மனமே.
உடல், வாய், கண், மூக்கு, காது ஆகிய
ஐந்து பொறிகளின் வழியாக செல்லும் ஆவலை விட்டுவிடு
ஐந்து பொறிகள் மூலம் வருபவற்றை அலட்சியம் செய்ய சொல்லப்படவில்லை, உயிர் உடலில் இருக்க அவை அவசியமானவை. அவற்றின் மூலம் கிடைக்கும் இன்பத்திற்காக அவற்றின் பின் செல்லும் மனதின் ஆவலையே ஒழிக்க வேண்டும். இதன் அவசியத்தை அழுத்தமாக சொல்வதற்காக இரண்டு முறை ஒழிவாய், ஒழிவாய் என்று சொல்லப்பட்டுள்ளது. முருகனின் திருவடிகளில் கவனம் வைப்பதே மனம் செய்ய வேண்டியது.
மனதிற்கு அறிவுரை சொல்லும் இரண்டாவது பாடல் இது. இதற்கு முன் ஏழாவது பாடலில் மனதிற்கு அறிவுரை கூறப்பட்டது.

No comments:
Post a Comment