செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இருசொல் லறவென் றலுமே
அம்மா பொருளொன் றுமறிந் திலேனே
செம்மையான மானின் மகளான வள்ளியை மற்றவரும் வள்ளியும் அறியாவண்ணம் களவு வழியில் கவர்ந்தவன்
பெரியவன் முருகன், பிறக்காதவன் இறக்காதவன்
மௌனமாக சொற்களின்றி சும்மா இரு என்றவுடன்
அம்மா (என்ன ஒரு அதிசயம் ! இதுவரை அறிந்திருந்த எந்த) ஒரு பொருளையும் இப்போது அறிந்திலேன்
பெம்மான் - பெரியோன், கடவுள்
திருடும் திருடன் ...
கடவுள் சீவன்களை, அவர்கள் அறிவுக்கு எட்டாத வகையில், அருளி தடுத்தாட்கொள்பவன். எனவே அவனை திருடன், கள்வன் என்று ஞானிகள் செல்லமாக அழைப்பர்.
சும்மா இரு சொல்லற ...
சும்மா இரு என்று மட்டும் சொன்னால் அது செயலற்ற தன்மையை குறிக்கும் என்று தான் சொல்லற என்கிற வியாக்கியானத்தோடு சொல்லப்படுகிறது போலுள்ளது. மனதின் மௌனம் பற்றி சொல்லப்படுகிறது.
பொருள் ஒன்றும் அறிந்திலேனே...
அர்த்தம் 1
இதுவரை பொருளாக தெரிந்த அனைத்தும் முருகனாக ஆனது
அர்த்தம் 2
அனைத்தும் தானாகி புறப்பொருள் எதுவும் இல்லாமல் போனது
அர்த்தம் 3
ஒரு பொருளை பார்க்கும் போது, மனம் அதைப்பற்றி சொற்களால் வர்ணித்து, வெளியில் இருக்கும் பொருளை பார்க்காது மனதில் இருக்கும் பொருளை பார்ப்பதும், அறிவதும் அனைவருக்கும் நடக்கும் செயல். சொல்லும், பற்றும், மனமும் போனது.

No comments:
Post a Comment