வடிவுந் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடியந் தமிலா அயில்வேல் அரசே
மிடி என்றொரு பாவி வெளிப்படினே
உடலழகும், பொருட்செல்வமும், நல்ல மனமும், நல்ல பண்பும்
குடும்பமும், கூட்டமும் விட்டு விலகிவிடுகின்றனவே ...
ஆரம்பமும் முடிவும் இல்லாத ஞானவேல் கொண்டு ஆள்பவனே ...
இல்லாமை என்கிற பாவி தலைதூக்கும்பொழுது.
குடிபோகியவா - விட்டுப்போகிறதே என்று வியப்பு கலந்து கூறப்படுகிறது
மிடி - இல்லாமை, வறுமை
மிடி என்றொரு பாவி ...
இந்த 'மிடி என்கிற பாவி' பொருள் இல்லாததால் ஏற்படும் வறுமையை குறிப்பிடவில்லை, அருள் இல்லாததால் ஏற்படும் ஞான வறுமையை குறிக்கிறது. இது தலைதூக்கியபின், பாடலில் சொல்லப்பட்டுள்ளவற்றோடு சேர்ந்து பொருளும் இல்லாது போகும். அனைத்தையும் துறந்து செல்பவருக்கும் இந்த மிடி வரலாம்.
இந்த மிடியிலிருந்து காக்கக்கூடிய, அளவில்லாத கூர்மையான ஞானத்தை வேலாயுதமாக கொண்டு ஆளும் கந்தனிடம், இந்த மிடி குறித்து முறையிடுகிறது இந்தப்பாடல்.

No comments:
Post a Comment