கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே
அர்த்தம் 1
கெடுகின்ற மனமே நீ கடைத்தேறும் வழி சொல்கிறேன் கேள்
ஒளியாது கேட்டவர்களுக்கு கொடு, கூர்மையான வேல் வைத்திருக்கும் இறைவனின் திருவடிகளை நினை (இவற்றை செய்தால்)
நீண்ட வேதனைகள் துகளாகி மறையும் வண்ணம் சுடுவாய்
உன்னைத் தொடரும் நல்ல, தீய வினைகளை விடுவாய்
(இரண்டு உபதேசங்கள் , இரண்டு பலன்கள்)
அர்த்தம் 2
கெடுகின்ற மனமே நீ கடைத்தேறும் வழி சொல்கிறேன் கேள்
ஒளியாது கேட்டவர்களுக்கு கொடு, கூர்மையான வேல் வைத்திருக்கும் இறைவனின் திருவடிகளை நினை,
நெடுங்காலமாக தொடரும் இந்த பிறந்து இறந்து பிறக்கும் வேதனையை சுடுவாய்.
இந்த வேதனைக்கு காரணமான நல்வினை, தீவினை இரண்டையும் விட்டு பற்றற்று செயல்புரி
(நான்கு உபதேசங்கள்)
கதி - வீடுபேறு, உயர்நிலை
கரவு - மறைத்தல்
வடிவேல் - கூர்மையான வேல், கந்தனின் வேல் ஞானசக்தியை குறிக்கும்
கரவாதிடுதல்...
இடுதல், ஈதல், தர்மம் செய்தல் என்று பலவாறு அழைக்கப்படும் இல்லாதவர்க்கு கொடுத்தல் என்பது ஆன்மிகப்பயணத்தில் ஒரு முக்கியமான செயலாக பார்க்கப்படுகிறது. அது தனக்கு சொந்தமான ஒரு பொருளை மற்றவர்களுக்கு உதவும் என்று கொடுப்பது. இடுதலுக்கு தரப்படும் முக்கியத்துவம் ஒருவருக்கு உதவுவது என்பதால் மட்டுமல்ல, மூவாசைகளில் ஒன்றான பொன்னாசைக்கு எதிரான ஒரு செயல் என்பதால் தான்.
இடுதலும் வடிவேல் இறைதாள் நினைதலும்...
இட்டவுடன் நம் மனம் கர்வம் கொள்ளும், அந்த கர்வம் அனுபூதிக்கு எதிரானது, அந்த மனதை பணியவைத்து கர்வத்தை விலகவைக்கவே உடனே வடிவேல் இறைதாள் நினைதல், ஞானத்தை ஆயுதமாக கொண்டிருக்கும் கந்தனின் திருவடி நினைதல்.

No comments:
Post a Comment