உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுர பூபதியே
இது மிக அருமையான பாடல். பலவிதத்திலும் அர்த்தம் கொள்ளக்கூடியது.
முதலில் கடைசி இரண்டு வரிகளின் அர்த்தம் பார்ப்போம்.
(மேலே சொன்னவாறெல்லாம் இருக்கும்) தேவர்களின் தலைவனே நீ எனக்கு புறப்பற்று எல்லாம் அறுந்து, அகப்பற்றும், நான் எனும் அகங்காரமும் இழந்து நலம்பெற வழிசொல்.
இப்போது முதல் இரண்டு வரிகளின் எனக்கு புரிந்த மூன்று அர்த்தங்களைப் பார்ப்போம்.
௧. பெருமகிழ்ச்சியுடன் துன்பமற்று யோகநிலையில் இனிமையாக பேசி விளையாடுபவன் நீ தானே
உல்லாச - பெருமகிழ்ச்சியுடன் இருப்பது
நிராகுல - துன்பமற்று இருப்பது
யோக - யோகநிலையில் இருப்பது
இத - இதமாக இருப்பது
(வித - பல விதமாக இருப்பது)
சல்லாப - காதல் பேசுதல் (இனிமையாக பேசுதல்)
விநோதன் - விளையாடுபவன்
௨. உல்லாச, நிராகுல, யோக என பலவிதங்களில் சல்லாப விநோதனாக (இனிமையாக பேசி விளையாடுபவனாக) இருப்பவன் நீ தானே.
அதாவது உல்லாச சல்லாப விநோதனாகநிராகுல சல்லாப விநோதனாக, யோக சல்லாப விநோதனாக என பலவிதமாக இருப்பவன் நீ தானே.
௩. என்னுடலில் உள்ள ஆறு ஆதாரங்களாக இருப்பவன் நீ தானே.
இந்த ஆறு வார்த்தைகளும் ஆறுபடை வீடுகளையும், நம்முடலில் இருக்கு ஆறு ஆதாரங்களை குறிப்பிடுகின்றன
உல்லாச - என்றைக்கும் ஒரே தன்மையாக இருப்பது; திருப்பரங்குன்றம்; மூலாதாரம் .
நிராகுல - துன்பமற்று ஞானமயமாக இருப்பது; திருச்செந்தூர்; சுவாதிஷ்டானம்.
யோக - யோகநிலையாகிய இன்பத்தைத் தருவது; திருஆவினன்குடி; மணிபூரகம்.
இத - இதமாக இருப்பது; சுவாமிமலை; அநாகதம்.
சல்லாபம் - குன்றுதோறாடல்; விசுத்தி.
விநோதம் - வியப்பு, மகிழ்ச்சி; பழமுதிர்சோலை; ஆக்ஞை.

No comments:
Post a Comment