முருகன் குமரன் குகனென் றுமொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வெண் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவும்
குருபுங் கவஎண் குணபஞ் சரனே
முருகன், குமரன், குகன் என்று உன் பெயர்களை சொல்லி
உருகும் செயல் நிகழும்படி செய்து, உணர்வை என்று அருள்வாய்?
போரிடும் தேவர்களும், பூமியில் இருப்பவர்களும் வணங்கும்
பரிசுத்தமான சிறந்த குருவே, எட்டு குணங்களும் குடியிருக்கும் கூடு போன்றவனே
பொரு - போரிடும்
புங்கவர் - பரிசுத்தமானர், சிறந்தவர், தேவர்கள்
பொருபுங்கவர் - தீயவற்றோடு எப்போதும் போரிடும் தேவர்கள்
பரவுதல் - புகழ்தல், துதித்தல்
எண்குணம் - ஆண்டவனிடம் இருக்கும் எட்டுகுணங்கள்
பஞ்சரம் - கூடு
முருகன்...
இளமையை உடையவன், அழகுடையவன், மணமுடையவன், தெய்வத் தன்மையுடையவன், இனியவன் போன்ற பொருள்களையுடைய பெயர். நமக்கு விருப்பத்தை ஏற்படுத்தி நம் உள்ளத்தை ஈர்க்கும் பண்புகள் கொண்டவன் என்பதே அடிப்படைக் கருத்து.
குமரன்...
உலக மாயையை போக்குபவன், மாரனை குலைக்கும் பேரழகன், துன்பத்தை அழிப்பவன் போன்ற பொருள்கள் கொள்ளும்படியான பெயர். நமக்கு நன்மைகளை ஏற்படுத்தி நற்கதியடைய செய்பவன் என்பது அடிப்படை கருத்து.
குகன்...
ஆதாரமானவன், (இதய) குகையில் இருப்பவன் எனும் பொருள்களையுடைய பெயர். இதய குகையை வடமொழியில் தகராகாசம் என்று சொல்வர். நம்முடலில் இந்த இடம் தன்னையும், இறைவனையும் உணரக்கூடிய இடம். இதுவே தமிழில் சிற்றம்பலம் என்று குறிப்பிடபடுவதாகவும் கூறுவார். அப்படிப்பட்ட இடத்தில நம்முடன் இணைய காத்திருக்கும் கடவுள் என்பதே அடிப்படைக் கருத்து.
முருகன் குமரன் குகன் ...
முருகனாக பார்த்து விரும்பி, குமரனாக வணங்கி நன்மை பெற்று, குகனாக உணர்ந்து இணையவேண்டும் என்பதை குறிக்கவே, கந்தனின் இந்த மூன்று பெயர்களை மட்டும் எடுத்து இந்த வரிசையில் கூறப்பட்டதாக அறிகிறேன்.
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்...
அநுபூதியை அடையும் பயணத்தில் உருகுதல் ஒரு முக்கியமான கட்டம். காப்புப் பாடலே 'நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருக' என்று துவங்குகிறது. அங்கு மட்டுமல்ல, கசிந்துருகுதல், நெக்குருகுதல் என உருகுதல் குறித்து பலமுறை கேட்டறிந்துள்ளோம். உருகாத மனம் பல விடயங்கள் அறிந்து அறிவாளியாகலாம் ஆனால் ஞானம் அடைய முடியாது.
நெகிழ்ந்து உருகக்கூடிய அளவு மனம் உயர்நிலை அடைந்த பின்னரே உணரக்கூடியது ஞான நிலை, அதனாலேயே உருகும் செயல் தந்தபின் உணர்வு அருளப்படுவது என்கிற வரிசையில் வருகிறது.

No comments:
Post a Comment